தந்தரகலை மந்த்ரகலை சார்பழுந்தச் சாற்றுமது
மந்தர சரியாதி மார்க்கமிது – முந்தைத்
தபதி விரத்தியரைச் சார்பழியச் சாற்று
முபதேச மென்றே யுணர்.
(இ-ள்.) தந்திரகலை மந்த்ரகலை சார்பு அழுந்தச்சாற்றும் அது மந்த்ர சரியையாதி மார்க்கம் – குண்டமண்டல வேதிகாதிகளைக்கூறுந் தந்திரகலைகளும், கிரியைகட்கு உரியவாகிய மந்திரங்களைக் கூறும் மந்திரகலைகளும், ஆன்மாவை மேன்மேலும் மலச்சார்போடு அழுந்தக் கூறும் அக்கலைகள் மந்திர தந்திர கிரியா பாவனைகளாற் செய்யும் சரியை கிரியா யோக நெறிகளாகும்;
இது முந்தைத்தபதி விரத்தியரைச் சார்பு அழியச் சாற்றும் உபதேசம் என்றே உணர்- இந்நூல் முற்பவங்களில் நிட்காமிய தவம்பண்ணின தபோதனர்க்கும், அத்தவத்தால் உட்பற்றறுதியுடையோர்க்கும் மலச்சார்பு அறும்படி கூறும் ஞானோபதேசம் என்று நீ அறிதி.
(வி-ரை.) அக்கலைகளால் போதவிரிவே அன்றி ஒழிவின்மையால், “சார்பழுந்தச் சாற்றும்” என்றார். இது “தபதிவிரத்தியரைச் சார்பழியச் சாற்றும்” என்றமையால், மற்றையர்க்கு ஆகாதென்பது ஆயிற்று.
இத்திருவெண்பாவால் இந்நூல் உபதேசகலையென்று அறிவித்தவாறு காண்க.