வாசகத்துங் கோவையினு மாணிக்க மாகவழங்
காசைத் துறைய நந்த மாமதிலே – யாசை
யிருதலைப்பா லேக மெனவிரண்டா மித்தி
லொருதலைக்கா மந்துறவன் றோ.
(இ-ள்.) வாசகத்தும் கோவை யினும் மாணிக்கம் ஆக வழங்கு ஆசைத்துறை அநந்தம் ஆம்- மாணிக்கமணிபோலாகப் புலவரான் எடுத்து வழங்காநின்ற சங்கத்தார் முதலியோர் கூறிய ஆசிரியப்பாக்களினும், மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருச்சிற்றம்பலக் கோவையார் முதலிய கோவைகளினும், காமத்தினது இலக்கணமாகக் கூறப்பட்ட கிளவித்துறைகள் அனந்தம் ஆகும்.
அதிலே ஆசை இருதலைப்பால் ஏகம் என இரண்டாம் இதில் ஒருதலைக்காமம் துறவு அன்றோ – அக்கிளவித் துறைகளுள் காமந் தலைவனும் தலைவியும் ஆகிய இருவர் பாலும் சமனொத்துக் கூடுவதாகிய இருதலைக் காமம் எனவும், ஒருவர் பால் மிகுந்தும் ஒருவர் பால் குறைந்தும் காமம் ஒவ்வாது கூடுவதாகிய ஒருதலைக்காமம் எனவும்,
இரண்டுள் அடங்குவதாம்; இவற்றுள் தலைவன் விழையாதிருப்பத் தலைவி விழைந்து பற்றும் ஒருதலைக்காமம் போல விடயாநந்தத்தைத் துறந்து சொரூபாநந்தத்தைப் பெறும் பொருட்டுச் சுத்தாவத்தையில் நிற்போர்க்கு இச்சொரூபாந்தம் கிடைத்திலது ஆயினும் இவ்வாநந்தத்தையே பெற விரும்பித் தொடர்ந்து நிற்பது அன்றோ துறவாவது?
(வி-ரை.) தலைவன் கூடி இன்பம் கொடாதிருப்பினும் தலைவி தனது கற்பால் பிறரை விழையாது அத்தலைவனையே விழைந்து நிற்றல்போல், சொரூபாநந்தம் தனக்குக் கிடைத்திலது ஆயினும் தனது தவக்கற்பால் விடயாநந்தத்தை விழையாது சொரூபா நந்தத்தையே விழைந்து நிற்கவேண்டுமென்பதும், தலைவி கற்பினைக் கண்டு தலைவன் காருணியத்தால் அவட்கு இன்பங்கொடுத்தல்போல், இவன் தவக்கற்பினைக்கண்டு சிவம் காருணியத்தால் தனதானந்தத்தை இவனுக்குக் கொடுக்கு மென்பதும், இவ்வுவமைக் குறிப்புகளாற் காண்க.
வாசகம்போல் இருத்தலின் ஆசிரியப்பாவை “வாசகம்” என்றார்.
இத்திருவெண்பாவால் சொரூபாநந்தத்தை விரும்பிச் சுத்தாவத்தையில் நிற்போர்க்கு இச்சொரூபாநந்தம் கிடைத்திலது ஆயினும். இவ்வானந்தத்தையே விரும்புவது அன்றி அசுத்தாவத்தையில் திரும்பி அவ்விடயாநந்தத்தை விரும்பல் ஆகாதென்று கூறியவாறு காண்க.