வேர்க்கும் விழித்ததும்பும் பொய்யறியின் மெய்வெதும்பி
யார்க்கும் விறைக்கு மருளுதிப்பின் – வாக்குமன
நின்றுபரி பூரணமாய் நேயத்தே கார்க்கதமாய்க்
கன்றிப் புளகி தமாங் காண்.
(இ-ள்.) வேர்க்கும் விழித்ததும்பும் பொய் அறியின் மெய்வெதும்பி ஆர்க்கும் விறைக்கும் – பொய்யாகிய கருவிகளை உள்ளபடி பொய்யாய் அறியின், மெய்யில் வெயர்வை அரும்பும், விழியில் நீர் ததும்பும், எல்லாம் பொய்யென்றறிந்து கொண்டேன் என்று உடலத்துள் இளஞ்சூடெழ ஆரவாரிப்பன், பின்னர்த் தன்னை உள்ளபடி கண்டு ஒன்றினையும் நாடாது உடலம் அசைவற இருப்பன்;
அருள் உதிப்பின் வாக்கு மனம் நின்று பரிபூரணம் ஆய் நேயத்தே கார்க்கதம் ஆய்க் கன்றிப் புளகிதம் ஆம் காண் – பின்னர் அருள் தோன்றுமிடத்து வாக்கு மனங்களில் நின்று அவ்வருள் பரிபூரணமாய்த் தோன்ற இதற்கு முதலாய நேயத்தை என்றைக்கு அடைவேன் என்று அந்நேயத்தைநாடி மேகங் குமுறுவதுபோலாய் உள்ளே குமுறி உள்ளம் வெதும்பி உடலம் உரோமாஞ்சலியாம்.
(வி-ரை.) வாக்கு மனங்களில் நின்று அருள் பூரணமாய் தோன்றுவதாவது, மனத்தால் நினைந்த நினைவு நினைந்ததில்லையாயும், வாக்காற் சொன்ன சொற்கள் சொன்னதில்லையாம், உன்தனக்கு அநுபவமாய்த் தோன்றுவதாம் எனக்கொள்க.
இத்திருவெண்பாவால் கருவிகளைப் பொய்யென்று அறிந்தவிடத்து வருங்குணமும், திருவருள் உதித்தவிடத்து வருங்குணமும், அறிவித்தவாறு காண்க.