உடற்குயிர்போற் கட்கிமைபோலூசி நூலொத்து
விடிற்புலி தீ பாம்பினில்வீழ் வார்க்காம் – சுடச்சுடினும்
வாழைக்கா காவேதி மட்கலத்துக் காகாவா
றேழைக்கா காத திது.
(இ-ள்.) உடற்கு உயிர்போல் கட்கு இமைபோல் ஊசி நூல் ஒத்து விடின் புலி தீ பாம்பினில் வீழ்வார்க்கு ஆம்– உடம்பை உயிர் அபிமானித்தல் போலும், கண்ணை இமையானது காத்தல்போலும், ஊசி சென்ற இடந்தோறும் சரடு பின் சேறல்போலும், ஞானாசாரியரைப் பிரியாது நின்று, அவர் திருமேனியை அபிமானித்தும், பாதுகாத்தும் அவர் திருவுள்ளக் குறிப்பின்படியே சென்றும் வழிபட்டு அவர் பார்த்துப் புலி, தீ, பாம்பாதிகளிற் செலுத்தினும் பின்னிடையாது, அவைமேல் விழும் அதிபக்குவர்க்கே இந்நூல் கொடுக்கலாகும்;
சுடச்சுடினும் வாழைக்கு ஆகா வேதி மட்கலத்துக்கு ஆகா, ஆறு ஏழைக்கு ஆகாது இது – மிகுந்த அக்கினியாற் சுடினும் வாழைத்தண்டைச் சுடக்கூடாதவாறு போலும், பரிசனவேதி மட்கலத்திற் பரிசித்துப் பொன்னாக்கக் கூடாதவாறு போலும், அங்கனம் ஆசாரியரை வழிபடமாட்டாத அபக்குவர்க்கு இந்நூல் கொடுப்பினும் அநுபவஞ் சித்தியாது.
(வி-ரை.) உயிரானது உடம்பைத்தானாய் அபிமானித்துத் துன்பந்துடைத்தல் ஒப்பனை செய்தல் முதலிய உபசாரங்களை அதற்குச் செய்வது போலும், அவர் திரு மேனியைத் தம் தேகமாய் அபிமானித்துச் செய்யவேண்டும் உபசாரமெல்லாஞ் செய்யவேண்டும் ஆகலின், ”உடற்குயிர்போல்” என்றும், இமையானது கண்ணை விட்டு நீங்காதிருந்து அதன்கண் துரும்பாதி வந்து சார்வதற்குமுன்னே நின்று பாதுகாத்தல்போலும், இரவும் பகலும் விட்டு நீங்காதிருந்து அவரைத் துட்டமிருக முதலிய வந்து சார்வதற்கு முன்னே நின்று பாதுகாக்கவேண்டும் ஆகலின், “கட்கிமை போல்’ என்றும் கூறினார்.
அதிபக்குவர் தேகாபிமானம்விட்டு அவரை மெய்ப் பொருளாகக் கருதினவர் ஆகலின், புலியாதிகண்மேற் செலுத்தினும் வீழ்வாரென்பது ஆயிற்று.
அக்கினிக்கும் பரிசனவேதிக்கும் விறகைச் சுடுதற்கும் உலோகங்களைப் பொன்னாக்கு தற்குங்கூடுமேயன்றி வாழைத்தண்டையும் மட்கலத்தையும் அங்ஙனஞ் செய்யக் கூடாதது போல், இந்நூலால் பக்குவர்க்கு ஞானம் விளங்குமே அன்றி அபக்குவர்க்கு விளங்காதென்பது அறிக.
இத் திருவெண்பாவால் இந்நூற்கு அதிகாரிகளின் இலக்கணம் அறிவித்தவாறு காண்க.