மாலயனா யிந்திரனாய் வாழுவதாய் மாளுவதாஞ்
சாலமயல் பார்த்துத் தலையசைப்பர் – ஞாலமயங்
குன்மத்தக் கோரணிபார்த் தோகோ வெனச்சிரிப்பர்
தன்னைப்பார்த் தாடுவர் தாந் தாம்.
(இ-ள்.) மால் ஆய் அயன் ஆய் இந்திரன் ஆய் வாழுவது ஆய் மாளுவது ஆம் சால மயல் பார்த்துத் தலை அசைப்பர் ஞாலம் மயங்கு உன்மத்தக் கோரணிபார்த்து ஓகோ எனச் சிரிப்பர்- தேவர்கட்கெல்லாம் மேலாய மால் என்னும் பெயரை உடையனாகியும், அயன் என்னும் பெயரை உடையனாகியும், இந்திரன் என்னும் பெயரை உடையனாகியும் சிறந்துள்ளார், தத்தம் பதவிகளில் அழிவின்றி வாழ்வதாய்க் கருதிக்கொண்டிருந்து, பன்னாளில் மாண்டு போவதாகும் அவரது மிகுந்த ஆணவ மயக்கத்தைப் பார்த்து, இவ்வாணவம், அவர்களையும் பொய்யாகிய தேகாதிகளையும் மெய்யாக் கருதப்பண்ணி மயக்கிற்று, கண்டீர் கொலோ என்று உள்ளத்து நாடி சிரக்கம்பங் கொள்வர். அவ்வாணவத்தான் இவ்வுலகத்தார் மயங்கா நின்ற பயித்தியக் கோரணிக் கூத்தைப் பார்த்து ஓகோ எனப் பிறர்க்குக் கேட்கச் சிரிப்பர்.
தன்னைப் பார்த்து ஆடுவர் தாம்தாம்- அஃதன்றி தம்மைப்பார்த்து, தம்மைச் சிவபூரணம் விழுங்கிக் கோடலால் காணாது, தாம் அச் சிவபூரணம் தாம் என நடனம் புரிவார்.
(வி-ரை.) மால் அயன் இந்திரன் முதலியோர் இறந்து போவது ஆகமப் பிரமாணத்தால் அறிவதாகலின், அவரது “மயல் பார்த்துத் தலையசைப்பர்” என்றார்.
பித்தமேறினோன் தன்னுடம்பு தெரியாது உலகர் நடைக்கு மாறுபாடாய்த் திரிவது போல், ஆணவ மேலீட்டால் தம்மைத் தெரியாது ஞானிகள் நடைக்கு மாறுபாடாய்த் தேகபோகங்களை விழைந்து கொண்டு, அறுவகைத் தொழில்களில் நானாபேதமாய் முயற்சிப்படலான், “உன்மத்தக் கோரணி” என்றார்.
அவர் மருளால் மயங்கி நடிக்கின்றார், இவர் அருளால் தெளிந்து நடிக்கின்றார் என்பதுங் காண்க. தாந்தாம் என்பது அந்நடத்திற்கு ஓர் தாளமும் ஆமெனக் கொள்க.