ஆசைமுத லான வனைத்தும் போய் நானதுவாம்
வாசனையு மாண்டு மறந்தறியா – நேசத்
துறும் போக வுல்லாச வூமைக்கூத்தாடிக்
குறும்போக்கு வந்து நடப்பார்.
(இ-ள். ஆசை முதல் ஆன அனைத்தும் போய் நான் அது ஆம் வாசனையும் மாண்டு மறந்து அறியா நேசத்து உறும் போக உல்லாச ஊமைக் கூத்தாடி – ஐந்து அவா முதலிய கருவிகள் அனைத்தும் இறந்து, நான் அச்சிவத்தோடு அத்துவிதமானேன் என்பதாகிய வாசனையும் இறந்து, தன் தரிசனம் திருவருள் தரிசனங்களில் நின்றோர் ஓர்காலை அவற்றை மறந்து மீண்டும் அறிவதுபோல் மறந்து அறியாத நேயத்துத் தோன்றும் பரிபூரணாநந்த போக உல்லாசத்தோடு மவுனக் கூத்தாடி,
குறும் போக்கு வந்தும் நடப்பார்- பின்னர்ச் சிறிதிடஞ்சென்று மீண்டும் வந்தும் உலாவுவார் ,அவ்வத்துவிதாநந்தம் பெற்றோர்.
(வி-ரை.) விடயங்களில் செல்லும் ஐந்து அவாவும் நீங்கவே, அவ்விடயங்களை அறிந்து பற்றி அவற்றுள் அழுந்துவதாய இருவகை இந்திரியங்களும், அந்தக்கரணங்களும் நீங்கும். இவைகள் நீங்கவே, ஒழிந்த கருவிகளும், நீங்கும். ஆகலின், “ஆசை முதலான வனைத்தும்போய்” என்று ஆசையை முன்வைத்துக் கூறினார்.
நேயத்தழுந்திய போது போதம் இறத்தலின், “மறந்தறியா நேசம்’ என்றார்.
சிறு பிள்ளைகள் போலுலாவி விளையாடுவராகலின், “குறும் போக்கு வந்து நடப்பார்” என்றார்.
இவையிரண்டு திருவெண்பாவானும் மெய்ஞ்ஞானிகள் அஞ்ஞானிகளது பொய்யுலகாசாரத்தைக் கண்டு சிரக்கம்பனாதிகளும், தம்முண்மையும் ஆநந்தாநுபவமும் கண்டு நடனாதிகளும் செய்வரென்று அறிவித்தவாறு காண்க.
கருவிகளும் போதமும் இறந்து நேயத்தழுந்தினோர் அக்கருவிகளும் போதமும் உடையோரது மயக்கமும் தமது தெளிவும் எங்ஙனமறிவார் எனின், மேற்கூறு கின்றார்.