ஒழுவிலொடுக்கம்

211. உடற்போகம் போக வுயிர்ப்பகை போய்ப் பேறுங்

உடற்போகம் போக வுயிர்ப்பகை போய்ப் பேறுங்
கெடத்தானுந் தன்னறிவுங் கெட்டோர் – நடக்கும்போ
தாகாயஞ் சாணிடல்போ லாவதல்லாற் பூரணர்க்குப்
போகாவூ ருண்டோ புகல்.

(இ-ள்.) உடல் போகம் போக உயிர்ப்பகை போய்ப் பேறும் கெடத்தானும் தன் அறிவும் கெட்டோர் – உடம்பான் அநுபவிக்கும் விடயபோகம் போக அப்போகமாகிய துன்பத்தை இன்பம் போல் மாறுபாடாய்த் தோற்றுவிக்கும் உயிர்ப்பகையாகிய ஆணவம் போய், பேரின்பத்தைப் பெற்றோமென்னும் பேறும் போக, தன்னையுந் தனக் கறிவிப்பதாய அருளையும் இழந்துள்ளோர்,

நடக்கும் போது ஆகாயம் சாண் இடல்போல் ஆவது அல்லால் பூர்ணர்க்கு போகா ஊர் உண்டோ புகல் – ஒர் திசையில் செல்லும் போது ஆகாயத்தைச் சாணிட்டளப்பதுபோல் பரிபூரணர்க்குத் தமது பூரணத்தில் தாம் செல்வது போல் தோற்றும் அல்லாமல் இது தீதென்று பகுத்துப்பார்த்து போகாது தவிரும் ஊரும் உண்டு கொல் நீ புகலுதி.

(வி-ரை.) ஆணவத்தால் இன்பமாய்த் தோன்றிய போகம், துன்பமாய்த் தோன்றிய போது அவ்வாணவங் கெடும். அவ்வாணவம் கெடவே தன் தரிசனமுந் திருவருள் தரிசனமும் பரையோகமும் ஆநந்தப்பேறும் உண்டாம். ஆநந்தப்பேறு இழந்த இடத்துத் தானுந் தனக்கறிவித்த அருளும் இன்றாம். ஆகலின், உண்டாம் அவைக்கும் இன்றாம் இவைக்கும் காரணம் இவையென்று உடற்போக இழப்பையும் உயிர்ப் போக இழப்பையும் எடுத்தறிவித்தார்.

ஆகாயத்தைச் சாணிட்டளக்கும்போது அளப்பது போல் தோன்றி, விடுத்தபோது அளந்ததும் இன்றாய், விடுத்தது இன்றாய் இருத்தல் போல், பூரணர்க்கு நடக்கும்போதும் அப்பூரணம் மாறாது அதனுள் நடப்பது போல் தோன்றி, ஓர் தானத்திருந்தவிடத்து முன் நடந்தோம் என்பதும், இப்போதிருந்தோம் என்பதும் தோன்றாதாகலின், “ஆகாயஞ் சாணிடல் போல்” என்று உவமை கூறினார்.

இத்திருவெண்பாவால் ஞானிகட்கு நிற்கு நிலையும், நடக்கும்போது உள்ள குணமும், ஒரூர் நிற்கை ஓரூர் தவிர்கையும் ஆகிய நியதி இன்றென்பதும், அறிவித்த வாறு காண்க.

ஆயின் அவர்க்கு நற்றானமும் தீதாயதானமும் சரியோ எனின், மேற்கூறுகின்றார்.