வணங்காவுரைக்கு வணக்கமிலை தீங்கை
வணங்கிவாழ்த் தென்னில் வளமியா -வணங்குகினும்
எல்லார்க்கு நன்றா யிருப்பதிலை யாதொன்றும்
எல்லார்க்கும் பொல்லா திலை .
(இ-ள்.) வணங்கா உரைக்கு வணக்கம் இலை தீங்கை வணங்கி வாழ்த்து என்னில் வளம் யா-போதம் அடங்காது ஏமாப்பாற் கூறும் நூலுக்கு அடக்கமே இல்லை, தீமைகளைச் செறித்து ஓர் நூலாக்கி அதற்கு அடக்கங்கூறி இதனை இகழாது புகழுங்கள் எனின், அதனால் வரும் நன்மை யாதொன்றும் இல்லை;
வணங்குகினும் எல்லார்க்கும் நன்றாய் இருப்பது இலை யாது ஒன்றும் எல்லார்க்கும் பொல்லாது இலை- நன்மைகளைச் செறித்து ஓர் நூலாக்கி அதற்கு அடக்கங் கூறினும் யாவர்க்கும் நன்றாயிருப்பது இல்லை, இவைகள் அன்றி மற்றியாதோர் நூலாயினும் யாவர்க்கும் பொல்லாங்காய் இருப்பதும் இல்லை.
(வி-ரை.) அடங்காவுரையெனவே அவன் அடக்கங் கூறினும் அடக்கம் அன்றென்பது ஆயிற்று. தீங்கினைச்செறித்து அடக்கங்கூறிப் புகழச் சொன்னமையால் வரும் நன்மை ஒன்றும் இன்றாயிற்று. நன்மைகள் யாவுஞ் செறித்து அடக்கங்கூறினும் பொறாமை முத லியவற்றால் சிலரால் இகழப்படுதலின், “எல்லார்க்கும் நன்றாயிருப்பது இலை” என்றும், பயன் இன்றாய்க் கூறும் யாதோர் நூலாயினுஞ் சிலர் அங்கீகரித்தலின், ”எல்லார்க்கும் பொல்லாதிலை”என்றுங்கூறினார்.
தீமை நன்மைகளை முற்கூறினமையால், “யாதொன்றும் என்பது இவைகட்குப் பொதுவாயிருந்த உலககதைகளைக் கூறும் நூல் எனக்கொள்க.
‘உரை’ என்பதும் ‘தீங்கு’ என்பதும் ஆகுபெயர். ‘தீங்கு’ என்றமையான் நன்மை என்று வருவிக்கப்பட்டது. ‘வணக்கம்’ – அடக்கம்.
‘வளமியா’ என்பது இகரக்குறுக்கம் ஆதலின் தளை தட்டாது என்பது காண்க.
இத்திருவெண்பாவால் இவைகள் இங்கனம் இருப்பயாம் எங்ஙனம் அவையடக்கங் கூறுமாறென்று குறிப்பால் அவையடக்கங் கூறியவாறு காண்க.