தருவனமென் றண்டு குடை சாயமரையாய் வாழு
நரவனமென் மேல்கீழ் நடுவென் – பரமசிவன்
றாக்கற் றதுபோ லருள் சிவனைச் சாராபோல்
றாக்கற்றார்க் கெங்குஞ் சமன்.
(இ-ள்.) தருவனம் என் தண்டு குடை சாயமரை ஆய் வாழும் நரவனம் என்மேல் நடு கீழ் என் –தருக்கள் நெருங்கிய சோலையாயின் என்னை, முள்செறிந்தவனம் ஆயின் என்னை? சிவிகை கவிகை சாய்மரை முதலியன உடையராய் வாழும் நரராகிய அடவி ஆயின் என்னை? உத்தம மத்திம அதமமாயுள்ள தலங்களாயின் என்னை?
பரமசிவன் தாக்கு அற்றது போல் அருள் சிவனைச் சாராபோல் தாக்கு அற்றார்க்கு எங்கும் சமன்- பரமசிவன் எல்லாவற்றோடுங் கூடியிருந்தும் அவற்றுள் தாக்கற்றிருந்தது போலும், திருவருளானது கிருத்தியங்கள் ஐந்தும் தன்னால் நடக்கவும் சிவத்தைவிட்டு நீங்காதிருப்பதே அன்றி இக்கிருத்தியங்கள் ஐந்தையும் ஒழித்து அச் சிவத்தைச் சார்வோம் என்று சாராதவாறு போலும் ஒன்றோடும் தாக்கற்ற ஞானிகட்கு முற்கூறிய இடமெல்லாஞ் சரியாம்.
(வி-ரை.) கருவிகள் எல்லாவற்றோடும் கூடியிருந்தும் அவற்றுள் தாக்கற்று நிற்றலால், “பரமசிவன் தாக்கற்றது போல்” என்றும், தேக இந்திரிய அந்தக்கரணங்கள் தம்மால் தொழிற்படினும் தாம் சிவத்தைவிட்டு நீங்காதிருப்பதே அன்றி இத்தேக இந்திரியாதிகளினது தொழில்களை ஒழித்து அச்சிவத்தை அடைவோம் என்பதின்றிப் பரிபூரணமாயிருத்தலின், “அருள் சிவனைச் சாராபோல்” என்றும் கூறினார்.
இத்திருவெண்பாவால் ஞானிகட்கு எவ்விடமும் சமனென்று அறிவித்தவாறு காண்க.
ஆயின் அவர்கட்கு இடந்தான் யாது எனின், மேற் கூறுகின்றார்.