ஒழுவிலொடுக்கம்

219. தண்டு குடை யாளராய்ச் சாதுரங்கப் பேரரசாய்த்

தண்டு குடை யாளராய்ச் சாதுரங்கப் பேரரசாய்த்
தொண்டர் குழாம் போற்றச்சுகித்தாலு – முண்டுசுத்தர்
போகத்தா ரோசுடர்போற் பொய்ப்போக மெய்ப்பெருக்காய்ச்
சாகப்போ வார்கடன்றீர்த் தல்.

(இ-ள்.) தண்டு குடை ஆளர்  ஆய்ப் சதுரங்கம் பேர் அரசு ஆய்த் தொண்டர் குழாம் போற்றச் சுகித்தாலும் உண்டு சுத்தர் போகத்தாரோ-நால்வகைச்சேனையுஞ் சிவிகை கவிகை முதலியவும் உடையவராய் வாழும் பேரரசரைப் போல, சிவிகை கவிகை முதலிய வுடையராய், அடிமைக் கூட்டங்கள் சூழ்ந்து நின்று உபசரிப்ப, மகா போகங்களை அனுபவித்தார் எனினும், அவற்றோடுந் தாக்கற்று நின்று சுத்தநிலை பெற்றாரும் உண்டு, அவர் இப்பிரபஞ்சிகள் போலும் போக மயமாய் அழுந்துவரோ? அழுந்தார் அஃது எங்ஙனம் எனின்,

சுடர்போல் பொய்ப்போகம் மெய்ப்பெருக்கு ஆய்ச்சாகப் போவார் கடன் தீர்த்தல் – எண்ணெய் வார்க்குந்தோறும் தன்னிடத்தில் வாங்கிக்கொண்டு தான் மிகவும் பிரகாசிக்கும் தீபம்போல், பொய்ப்போகம் வருந்தோறும் அதனைத் தற்போதத்தால் பற்றி அநுபவியாது அருட்கண்ணால் பார்த்துத் தாம் அற்று அநுபவித்தலின் அது மெய்ப்பொருட்காய்ப் பொய்ப்போகத்தான் மெய்ப்பொருள் மிகவும் பிரகாசமாய்த் தோன்றும் ஆகலின், இங்கனம் என்று அறிதி; ஆயின், மெய்ப்பொருளை உணர்ந்தோர் பொய்ப்போகத்தோடும் கூடியிருந்து அநுபவிப்பது என்னை எனின், அக்கினியில் வீழ்ந்து இறக்கப்போவார் தமக்குரியராய் உள்ளார் கொடுக்கும் போகமாகிய கடனை வாங்கி அதனுள் விருப்பற்று உண்டு தீர்த்துக்கோடல் போல், அவரும் இத்தேகத்தை எப்போது ஒழிவோம் என்னும் கருத்தராய், இதற்கமைத்த பிரார்த்தகடனை விருப்பற்று அநுபவித்துத் தீர்த்துக்கொள்வார், ஆகலின், அவர் அதனோடுங்கூடி இருத்தல் இம்முறைமை என்று அறிதி.

(வி-ரை.) போகம் வருந்தோறுந் தமக்கென்று தற்போதத்தால் பற்றி அநுபவியாது அப் போதம் அற்று அருள் வடிவாயிருந்து அப்போதத்தைத் தாம் அநுபவிப்பது போல் சிவத்திற்கு ஆக்குவது மெய்ப்பத்தி, இப்பத்தியினால் அச்சிவமாவது போதம் சிறிது எழினும் அதனை விழுங்கிக்கொண்டு நின்று பிரகாசிக்கும், ஆகலின், “பொய்ப்போக மெய்ப்பெருக்காம்” என்றார்.

சாகப்போவார் போகத்தை விரும்பா திருக்கவும் சுற்றத்தாராயுள்ளார் அவரை வேண்டிக் கொடுவந்து புசிப்பித்தல்போல், ஞானிகள் போகத்தை விரும்பாதிருக்கவும் பிராரத்தம் வலியக் கொடுவந்து புசிப்பித்தலின், இங்ஙகனம் உவமை கூறினார்.

இத்திருவெண்பாவால் பிரார்த்தத்தால் வந்த பெருவாழ்வின் கண் பற்றின்றி அவ்வாழ்வு அநுபவிப்பைப் போதத்தால் தாமநுபவியாது சிவத்துக்கு அற்பிதஞ் செய்கின்றோரும் ஞானிகளே என்று அறிவித்தவாறு காண்க.

ஞானிகள் அநுபவிப்பதும் பிராரத்தம், மற்றையர் அநுபவிப்பதும் பிரார்த்தம், ஆயின் அவர்க்கும் இவர்க்கும் பேதம் என்னை எனின், மேற்கூறுகின்றார்.