ஒழுவிலொடுக்கம்

18. அறைந்த பறை குழற்கு மாடினர்க்கு மேற்க

அறைந்த பறை குழற்கு மாடினர்க்கு மேற்க
மறந்தழுவார் வாய்ப்பாட்டு வாரா – திறங்கேளீர்
கூடக் கரைவ தலாற் கூறிற் பயனில்லாப்
பாடற்கார் பார்ப்பார் பயன்.

(இ-ள்.) அறைந்த பறை குழற்கும் ஆடினர்க்கும் ஏற்க மறந்து அழுவார் வாய்ப்பாட்டு வாரா- கரத்தால் அறையப்பட்ட மத்தளத் தொனிக்கும், இத்தொனிக்கு ஏற்ப ஊதுங் குழல் ஓசைக்கும், இவைகட்கு ஏற்ப நடனமிடு வோர்க்கும் ஏற்பத்தம்மை மறந்து அழும் மகளிரது அவ்வழுகையாகிய வாய்ப்பாட்டு ஒத்துவராது (அதுபோலும்) இந்நூல் தற்போதம் இழந்து நின்று கூறியது ஆகலின் எழுத்து முதலிய ஐந்து இலக்கணங்களோடு ஒத்துவாராது, அஃது அங்ஙனம் ஆயினும் அதன்கட் கூறிய பொருள் தான் நன்குளதோ எனின்;

திறம் கேளீர் கூடக்கரைவது அலால் கூறின் பயன் இல்லாப்பாடற்கு ஆர் பயன் பார்ப்பார் – இந்நூலின் பொருள் திறமையை நீர் கேட்பீராக, (அஃதெங்ஙனம் எனின்) இப்பொருளைக் கேட்போர் இப்பொருளோடுங்கூடத் தாமும் கரைந்து போவதேயன்றிச் சொல்லுமிடத்துத் தாமுந் தமக்குவரும் இம்மை மறுமைப் பயன்களும் இல்லாத பாடற்கு யாவர் அருத்தம் பார்ப்பார்?

(வி-ரை.) தாளமும் ஓசையுஞ் சரியொத்தநடனத்தோடு; துன்பமேலீட்டால் தம்மை மறந்து அதன் மயமாயிருந்து அழுவார் அழும் ஓசை ஒவ்வாதது போல், இன்ப மேலீட்டால் தம்மை மறந்து இதன் மயமாயிருந்து கூறிய இப்பாடல் இலக்கணத்தோடு ஒவ்வாது என்பது குறிப்பால் அறியம்படி கூறினார்.

இதனது அருத்தம் போதவொழிவும் சிவாநந்தப்பேறும் ஆகலினும், இதனைக் கேட்ட அதிபக்குவர் அக்கணமே போதம் அழிந்து ஆநந்த மயமாவர் ஆகவினும், “கூடக் கரைவது” என்றும், பயன் பெறும் போதம் ஒழிவதனால், “பயனில்லாப்பாடல்’” என்றுங் கூறினார்.

இத்திருவெண்பாவால் சத்தத்திற்குப் பஞ்சவதிகார வழுவுண்டாயினும் அருத்தம் எல்லா நூல்களினது அருத்தங்கட்கு முடிவென்று கூறியவாறு காண்க.