ஒழுவிலொடுக்கம்

224. கால முடன்றேசந்திக்குக் கருமமுடற்

கால முடன்றேசந்திக்குக் கருமமுடற்
கோலஞ் சமயங் குறிப்பறிதல் – சீலந்
தலையோடு போனவுயிர் தான் போலத் தன்னோ
டிலையாஞ் சிவனே யிவன்.

(இ-ள்.) காலமுடன் தேசம் திக்குக் கருமம் உடல் கோலம் சமயம் குறிப்பு அறிதல் சீலம் – இன்ன காலத்து இன்ன விரதஞ் செய்வதென்னும் காலமும், காசி முதலியன நன்று மற்றையன தீது என்னும் தேசமும், இன்னதிக்கு நன்று இன்னதிக்குத் தீது என்னும் திக்கும், இன்ன கருமஞ் செய்வது இன்ன கருமந்தவிர்வது என்னும் கருமமும், உடலின் சமைந்த வேடங்களும், அவ்வேடங்கட்குரிய சமயங்களும், அச்சமயங்கட்குரிய கடவுளரை இங்ஙனம் இருப்பரெனக் குறிப்போடு தியானிப்பதாய குறிப்பறிதலும், இன்ன சாதிக்கு இன்னது ஆசார மென்று செய்யுஞ் சீலமும், ஆகிய இவையெல்லாம்

தலையோடு போன உயிர்தான் போலத் தன்னோடு இலை ஆம் சிவனே இவன்-தலைபோன விடத்து அதனோடும் போன உயிர்போல, தற்போதம் இறந்தவிடத்து அதனோடும் நீங்கும், ஆகலின் மௌநாநந்தமாயிருந்த சிவனே இவனும்,

(வி-ரை.) கை கால் முதலிய உறுப்புக்கள் போன விடத்தும் இருந்த உயிர் தலையோடும் போனதுபோலப், போதம் சிறிது இறந்தவிடத்தும் இருந்த கிரியைத் தொழில்கள் அது முற்றும் இறந்தவிடத்து அதனோடும் நீங்கும் ஆகலின், அங்ஙனம் உவமை கூறினார். அவற்றைச் செய்தவன் இறந்தமையால் இவனாற் செய்யப்படும் அவையும் இல என் பதுங் காண்க.

மௌநாநந்தமாயுள்ள சிவனை அடைந்தவன் மெளநாநந்தியாகலின் “சிவனே யிவன்” என்றார். தான் அசை.

இங்ஙனம் அவர்க்கு விதிவிருத்தங்கள் இல்லையென்று நீர் கூறியது என்னை எனின், மேற் கூறுகின்றார்.