ஒழுவிலொடுக்கம்

229. தத்துவத்தின் போர்வை சரிந்த திகம்பரிபே

தத்துவத்தின் போர்வை சரிந்த திகம்பரிபே
ரத்து விதியே காந்தி யாநந்தி – சுத்தன்
துரியனவ தூ தன் றுறவிசிவ யோகி
நிருவாணி யென்விரத்த னென்.

(இ-ள்.) தத்துவத்தின் போர்வை சரிந்த திகம்பரிபேர் – முப்பத்தாறு தத்துவங்களாகிய போர்வை சரிந்த அதனால் திகம்பரியாயிருந்த ஞானியினது பெயர் சொல்லுமிடத்து,

அத்துவிதி ஏகாந்தி ஆநந்தி சுத்தன் துரியன் அவதூதன் துறவி சிவயோகி நிருவாணி என் விரத்தன் என் – சிவத்தோடும் அத்துவிதமா யிருத்தலின் அத்துவிதீ யென்றும், அங்ஙனம் அத்துவிதமாயிருப்பினும் தான் அச்சிவ மாகாமையான் ஏகாந்தி யென்றும், பூரணாருந்த மெல்லாம் தானாய் நின்று அநுபவித்தலின் ஆநந்தி யென்றும், மலத்திரயங்களை நீங்கிநிற்றலால் சுத்தனென்றும், மேலாய பொருளை அடைந்தோ னாகலின் துரிய னென்றும், வர்ணாச்சிரமங்களைக் கடந்து நிற்றலான் அவதூத னென்றும், (தேகாதி பிரபஞ்சங்களெல்லாம் துறந்து நிற்றலால்) துறவி யென்றும், மற்றொன்றோடுங் கூட்டரவின் றிச் சிவத்தோடும் கூட்டரவா யிருத்தலின்) சிவயோகி யென்றும், (அத்துவா ஆறையுங் கடந்து நிற்றலான்) நிருவாணி யென்றும், (அச்சிவத்தோடு அத்து விதமாக இருக்கின்றே னென்னும் வாசனையும் இறந்து போ யிருத்தலின்). விரத்த னென்றும் நீ சொல்லுதி.

(வி-ரை). உடம்பைப் போர்த்து நின்று நீங்கிய போர் வைபோல் உயிரைப் போர்த்து நின்று நீங்கினமையால் “தத்துவத்தின் போர்வை சரிந்த ” என்றார். அஃதன்றிப் பூதகஞ்சுகம் பிரகிருதிகஞ்சுகம்–கலாதிகஞ்சுகம்- வயிந்தவ கஞ்சுகம் சத்திகஞ்சுகம் என்னும் இப்பஞ்ச கஞ்சுகங்களையும் நீக்கிநின்றா ரெனினுமாம்.

அத்து விதி யென்றதாதி இக்குணங்களெல்லா முடை யானாகலின் இப்பெயர்களெல்லா மவற்குரித்தாயின.

இங்ஙனம் அகத்துளாசையற்றுத் துறந்தோரையும் அகத்துளாசை யிருக்கத் துறந்தோரையும் எங்ஙன மறிய லாமெனின், மேற்கூறுகின்றார்.