ஒழுவிலொடுக்கம்

230. அடங்கத் துறந்தார்க்கு மாசையறப் பாவித்

அடங்கத் துறந்தார்க்கு மாசையறப் பாவித்
தொடும்பக் குவந்தெரியா தோகோ – மடந்தேடிப்
பிச்சையாய் மூலையிற் பெண் பேச்சாய் வரினடைக்கைக்
கிச்சையாய்க் கைக்கெதிர்நீட்டும்.

(இ-ள்.) அடங்கத் துறந்தார்க்கு மாசையறப் பாவித் தொடும் பக்குவந்தெரியாது ஒகோ-அகத்து ஆசையிருக்கப் புறத்து ஆசையறப் பாவித்து அடங்கத் துறந்தாரையும், இயல்பாய், அகத்து ஆசையற்று அடங்கத்துறந்தாரையும் அவரோடு நிகழும் பக்குவாபக்குவங்களினாலே ஓகோ தெரியாதோ? அஃதெங்ஙனமெனின்,

மடந்தேடிப் பிச்சையாய் மூலையிற் பெண் பேச்சாய் வரினடைக்கைக் கிச்சையாய்க் கைக்கெதிர் நீட்டும் – அவர் நற்பிச்சையிடும் மடந்தேடிச் சென்று பிச்சை ஏற்பதாய், புதிய மருமகப்பெண் மூலைக்கண் இருந்து மெல்லெனப் பேசும் பேச்சுப்போல் தமக்கென ஓர் ஒடுக்கம் பற்றி அதனுள் இருந்து மாரிசத்தோடு மெல்லெனப் பேசுவதாய், இவர் பெரியரெனக் கருதிப் பிறர் அன்ன வத்திர முதலிய நடைக்கை கொடு வரின் அந்நடைக்கைக்கு இச்சையாய் அவர் கொடுக்குங் கைக்குத் தமது கையை எதிர்நீட்டி வாங்குவர், இவர்க்கு எல்லா மனைதோறுஞ் செல்வதேயன்றி ஓர் மடந்தேடிச் செல்வதும், ஓரொடுக்கம் பற்றியிருந்து மாரிசமாய்ப் பேசுவதும், தாம் இருக்கும் இடத்துப் பிறர் அன்னாதிகளைக் கொடுவரின் அவற்றை இச்சித்து வாங்கு வதும் இல்லை ஆகலின், அவரது பக்குவமும், இவரது பக்குவமும் தாமே தெரியும் நீ அறிதி.

(வி-ரை.) “ஆசையறப்பாவித் தடங்கத் துறந்தார்க்கும்” என்றமையான், அங்ஙனம் பாவியாது இயல்பாய்த் துறந்தாரை என்பது வருவிக்கப்பட்டது.

அடங்கத்துறத்தல் மனைவி முதலிய பற்றுக்களை எல்லாம் ஒருங்கே விடுத்தல். அடங்கத்துறந்தார்க்கும் என்னும் நான்காம் வேற்றுமையை இரண்டாம் வேற்றுமையாகக் கொள்க. ”தெரியாதோ” என்பது தெரியாதென்று ஓகாரந்தொக்கு நின்றது. மடந்தேடிப் பிச்சையாய்க் கைக்கெதிர் நீட்டுமென்று அவரது நடை கூறினமையால், அதற் கெதிர்மறையாய் இவரது நடை வருவிக்கப்பட்டது.

ஒருவருக்குச் செல்வம்வரின் அதனை நடைக்கை என்பதுபோல், பிறர் வந்து அன்னதிகளைக் கொடுப்பதனை நடைக்கை என்றார்.

ஆயின், அகப்பற்று அற்றார் துறப்பதே அன்றி, அகப்பற்றுடையார் துறக்கலாகாதோ எனின் மேற்கூறுகின்றார்