சுந்தரனார் சேரர்கோன் சோழர் குறுமன்னர்
மைந்தருட றம்முடலை வாட்டினர்க-ளந்தமிலாப்
பத்தரொடு ஞான வயிராக்கியர் பலர்க்கு
மொத்தது சார் போத வொழிவு.
(இ-ள் ) சுந்தரனார் போத ஒழிவு – என்பது –சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், செங்கட் சோழநாயனார், புகழ்ச்சோழ நாயனார் ஆகிய சோழ ராசாக்கள் மெய்ப்பொருள் நாயனார், கழற்சிங்கர் முதலிய குறுமன்னர், மைந்தருடலை வாட்டிய சிறுத்தொண்ட நாயனார், தம்முடலை வாட்டிய கண்ணப்பநாயனார், அரிவாட்டாயனார் முதலியோர், நாசமில்லாத திருநீல கண்ட நாயனார், அதிபத்தரோடு மற்றும் உண்டாகிய ஞானிகள், வைராக்கியராயுள்ள இம் மெய்யடியார் பலருக்கும் குடும்பத்திற் கூடியிருந்தும் அதன்கட் சார்போதம் ஒழிந்து நிற்றல் ஒன்றாய் ஒத்திருந்தது, ஆகலின், சார் போதம் ஒழிவோர் எவ்வறத்திருப்பினும் ஒழிந்து நிற்பர், ஒழியாதார் எவ்வறத்திருப்பினும் ஒழியார் என்று அறிதி.
“நெய்யுண்டநாய்” யென்னுந் திருவெண்பா முதல் இவை நான்கு திருவெண்பாவானும், பற்றற்ற ஞானிகட்கு இல்வாழ்க்கையில் ஞானவொளி விளங்கலின், இரவு விளக்குப்போன்று அந்த ஞானம் பயன்பட்டு அதிகமாம் என்பதும், அவர் அக் குடும்பத்தில் பற்றிலராகலின் பிறப்பு உண்டாகாது என்பதும், அவர் எவ்விடத்திருப்பினும் நிலை அயரார் என்பதும், இவ்வாறு குடும்பத்திலிருந்தும் ஞானிகளாயிருந்தோர் இவரிவ ரென்பதும், அறிவித்தவாறு காண்க.
ஒன்பதாம் அதிகாரம் வாதனை மாண்டார் தன்மை முற்றிற்று.