செத்துப் பிறவாமற் றேடித் திரிகையிலே
செத்துப் பிறந்து திரிவீரே – சுத்த
விருட் கேவலசகலம் போகவெதிரிட்ட
வருட்போத ராய்த்திரியாமல்.
(இ-ள்.) செத்துப் பிறவாமல் தேடித் திரிகையிலே செத்துப் பிறந்து திரிவீரே – இனிமேல் இறந்து பிறவாமல் இப்போது பிறப்பிறப்பைக் கடந்துநின்ற வீடு தேடிப்பாவனை முதலிய செய்து உள்ளே சுழலுமிடத்துத் தானே கேவலாவத்தையில் இறந்துஞ் சகலாவத்தையில் பிறந்துஞ் சுழல்வீர்
எதிரிட்ட இருள் கேவல சகலம் போகச்சுத்த அருட்போதர் ஆய்த் திரியாமல் – உமது அறிவிற்கு எதிரிட்ட மயக்க வடிவாகிய கேவலாவத்தையும் விகற்ப வடிவாகிய சகலாவத்தையும் போக, இவைகள் தாக்காத சுத்தாவத்தையில் நின்று, அருளே எவைக்கும் தாரகம் என்று அறிந்து நாடி அவ்வருட் போதராய்ச் சஞ்சரியாமல் இது என்னை?
(வி-ரை.) மயக்கமாய் வந்தடுப்பது கேவலம், விகற்பமாய் வந்தடுப்பது சகலம், மயக்கம் வந்தடுத்த போது மயக்க வடிவாய் நின்றும், விகற்பம் வந்தடுத்தபோது விகற்ப வடிவாய் நின்று, மயக்கம் நீங்கிய போது அம்மயக்கத்தை மயக்கம் என்றறிந்தும், விகற்பத்திற்சென்று மீண்டபோது அவ்விகற்பத்தை விகற்பம் என்றறிந்தும், இங்ஙனம் அவற்றில் மறைந்துஞ் சுழன்றும் அவற்றை இவை என்று அறிந்துநின்ற அறிவு தான் என்றறிந்து, அவற்றையுந் தன்னையுந் தனக்கறிவித்தது அருளென அறிந்து, அவ்வருள் தன்னை எப்போதும் விட்டு நீங்காதென்று அறிந்து, அவ்வருளை நாடிநிற்கவே, அம்மயக்க விகற்பமாகிய கேவல சகலங்களில் நீங்கி, அருள் பூரணமாய்ப் பிரவேசிக்கும் ஆகலின், “இருட்கேவலசகலம்போகவெதிரிட்டவருட்போதராய்த் திரியாமல் ” என்றார்.
இத்திருவெண்பாவால் ஆன்மபோதஞ் சீவியாது அருட்போதத்தை நாடி நின்றால், அவ்வருள் அறியப்படும் என்று அறிவித்தவாறு காண்க.
இங்ஙனஞ் சகல கேவலங்கள் தன்னால் அறியப்படுதலின் அவற்றைத் தன்னால் நீக்கக்கூடாதோ? எனின், மேற் கூறுகின்றார்.