சாக்கிரத்திற் போதச் சலனையெல்லாஞ் சொப்பனம்போ
லாக்கு மருட்போத ராகுவோர் – நீக்கும்
பரையோகர் சுத்தர் பரமசுகா நந்தர்
துரியகதி யின்பு கடந் தோர்.
(இ-ள்.) சாக்கிரத்தில் போதச்சலனை எல்லாம் சொப்பனம்போல் ஆக்கும் அருட்போதர் ஆகுவோர் – சாக்கிராவத்தையில் தோன்றும் போதச் சேட்டையுமற்றும் உண்டாகிய தேகாதி பிரபஞ்சங்கள் எல்லாமும் இவை யாவை என்ன எதிரிட்டுப்பார்த்து, அப்போதச் சேட்டை விடயங்களைச் சார்ந்த இடத்துத் தோன்றிய விடயபோதம் என்றும், தேகாதி பிரபஞ்சங்களெல்லாவற்றையும் மாயையில் தோன்றி அழிவதுவென்றும், இவற்றிற்கெல்லாந் தாரகமாய் உட்புறம்பாய்ப் பரிபூரணமாய் நிற்பது அருளென்றுங் கண்டு, பின்னர் அப்பரிபூரணமாகிய அருளே மெய்யென்று அதனை நாடி நின்று, இவ்விடயபோதத்தையும் இப்பிரபஞ்சங்களையுஞ் சொப்பனம் போலப் பொய்யாக்கும், அவர் இவற்றை உள்ளபடி நீங்கி அவ்வருட்போதரே ஆகுவர்; அஃதன்றி அவரே,
நீக்கும் பரையோகர் சுத்தர் பரமசுகாநந்தர் துரியகதி இன்புகடந்தோர்-அவ்வருளையும் கடந்து செல்லும் பரையோகரும், தற்சுதந்திரமற்ற பரிசுத்தரும், அப்பரம சுகமாகிய ஆநந்தத்தை யுடையரும், நின்மல துரியத்தில் தோன்றும் பரமசுகாநந்தாதீதரும் ஆவர்.
வி-ரை. இங்ஙனம் விடயபோகத்தையும் தேகாதி பிரபஞ்சங்களையும் பொய்யென்றும், தமக்கன்னிய மென்றும் கண்டு, இவற்றிற்குள்ளும் புறம்பும் பரிபூரணமாகிய திருவருளையே நாடிநிற்போர் இப்பொய்களை நீங்கி அம்மெய்யாகிய திருவருளே வடிவாவர் ஆகலின், “சொற்பனம்போலாக்கு மருட்போத ராகுவோர்” என்றும், அங்ஙனம் அருள் வடிவாய காலத்து அவ்வருளையுங் கடந்து பரையோக முதலியன அவர்க்கு எளிதில் உண்டாம் ஆகலின், அவரையே பரையோக முதலியன உடையரென்றுங் கூறினார். அவர் என்னுஞ் சுட்டுப்பெயர் எஞ்சிநின்றது.
இத்திருவெண்பாவால் கருவிகளை உள்ளபடி கண்டறியில் திருவருள் நிலை காண வருமென்றும், அங்ஙனம் வரின் பரையோக முதலிய பேறுளவாமென்றும், அறிவித்தவாறு காண்க.
இங்ஙனம் விடய போகத்தையுந் தேகாதி பிரபஞ்சங்களையு நீங்கி அருளைப் பெறுவதே அமையாதோ, அதற்கு மேல் நீர் பரையோக முதலியன கூறியது என்னை எனின், மேற்கூறுகின்றார்.