நடந்ததெல்லா நீயே நடப்பழிய நின்ற
விடஞ்சிவ நீ யென்றிருக்க வெண்ணி – லடங்கின்
மயக்கி மலமழுத்து மாயையிது வாரா
வயிர்ப்பருளா லாஞ்சிவயோ கம்.
(இ-ள்.) நடந்தது எல்லாம் நீயே நடப்பு அழிய நின்ற இடம் நீ சிவம் என்று இருக்க எண்ணில் அடங்கின் மயக்கி மலம் அழுத்தும்- கருவிகளை இது இது என்று அறிந்து சென்றதெல்லாம் உன் தற்போதமேயாம், ஆகலின் இது சிவயோகம் அன்று, அக்கருவிகளை அறிந்து சென்றது ஒழிய நின்ற இடத்தை நீ சிவயோகம் என்று இருக்கக் கருதினை எனின், அக்கருவிகள் அடங்கின் உன்னை ஆணவமலம் மயக்கித் தன்வயப்படுத்தும், ஆகலின், அக்கருவிகள் ஒழிய நின்ற இடம் சிவயோகம் அன்று, ஆயின் சிவயோகம் யாதினால் உண்டாம் எனின்
மாயை இது வாரா அயர்ப்பு அருளால் சிவயோகம் – உன்னால் அறியப்படும் கருவிகள் எல்லாம் மாயை, அக்கருவிகள் ஒழிய நின்றவிடத்து மறப்பாய் நின்றது ஆணவமலம், ஆகலின், அம்மாயையும் இவ்வாணவமும் வந்தடாத சுத்தத்தின்கண் தோன்றுந் திருவருளால் உண்டாம் சிவயோகம் என்றறிதி. இது என்றதை “இது ஆணவம்” எனக் கொள்க. சகல கேவலங்களிற் செல்வது உயிர்க்குப் பழக்கமாகலின் இவற்றை மறந்து நின்ற சுத்தத்தை அயர்ப்பு என்றார்.
இச்சகல கேவலங்கள் அற்றபோது தற்போதம் அறாதோ? இவற்றின் மேலும் போதம் உளதென்று நீர் கூறியது என்னை? எனின், மேற்கூறுகின்றார்.