ஒழுவிலொடுக்கம்

250. தாமருந்தல் போலத் தமைச்சிவனுக் கூணாக்கித்

தாமருந்தல் போலத் தமைச்சிவனுக் கூணாக்கித்
தாமருளா லுண்டுபரை தாமாகித் – தாமழிய
வஞ்செழுத்தா லர்ச்சித் தடியார்க் கடிமை செயிற்
பஞ்சமலக் கொத்தறுமப் பா.

(இ-ள்.) தாம் அருந்தல்போலத் தமைச் சிவனுக்கு ஊண் ஆக்கித் தாம் அருளால் உண்டு பரை தாம் ஆகித் தாம் அழிய- தமக்கு ஊணாயிருந்த அன்னாதிகளைத் தாம் அருந்தல்போலத் தற்போதஞ் சீவியாது நின்று  தம்மைச் சிவனுக்கு ஊணாய் உண்ணக்கொடுத்து, பஞ்ச விடயங்கள் வந்தடுப்பினும் அவற்றைத் தற்போதத்தால் சென்று பற்றி அவற்றில் அழுந்தாமல் அருளை முன்னிட்டுக் கொண்டு அவ்வருள் தர வாங்கி உண்கின்றோம் என்னும் ஞாபகம் மறவாமல், அவ்வருளால் வாங்கி உண்டு, இங்ஙனம் அவ்வருளால் அறிகின்றோம் என்னும் போதமுஞ் சுருங்கி பரையே தாமாகி தற்சுதந்திர அறிவு கெட்டுப்பின்னர் ஆனந்தா நுபவத்தில் தாமழியவே.

பஞ்சமலக் கொத்து அறும் அஞ்செழுத்தால் அர்ச்சித்து அடியார்க்கு அடிமை செயில் அப்பா-ஆணவம், மாயை, காமியம், திரோதை, மாமாயை என்னும் பஞ்சமலக் கூட்டங்களும் அறும், அங்ஙனம் நிட்டை கூடி இப்பஞ்சமலங்களை நீக்கக் கூடாதாயின் சிவம் முன்னாக விதிப்படி உச்சரிப்பதாய பஞ்சாக்கரத்தால் சிவன் திருவடியை அருச்சனை பண்ணி, அத்திருவடியை அடைந்த மெய்யடியார்க்கு அடிமை பூண்டு, பணிவிடை செய்யின், முற் கூறிய அநுபவங்கள் எல்லாங் கைகூடும், பஞ்சமலங்களும் அறும் என்று அறிதி நீ மாணாக்கனே.

(வி-ரை.) தமதுடல் அருந்தும் ஊண் அவ்வுடலுக்கு உண்ணக்கொடுத்து நிற்கவே, அதனை அவ்வுடல் சிறுகச் சிறுக உண்டு தான் பருத்தல் போலத், தற்சேட்டை அற்றுத் தம்மைச் சிவனுக்கு ஊணாகக் கொடுத்து நிற்கவே, அச்சிவந்தம்மைச் சிறுகச்சிறுக உண்டு தான் பூரணமாய் விளங்கும் ஆகலின், “தாமருந்தல்போலத் தமைச் சிவனுக் கூணாக்கி ” என்றார்.

விடயங்கள் வந்தடுக்கும்போதுந் தற்போதத்தைப் பின்னிட்டு அருட்போதத்தை முன்னிட்டு, அவ்வருளால் அவ்விடயங்களை அறிந்து பற்றி, அவற்றை அனுபவிக்கும் போதும் அவ்வருளை முன்னிட்டு நின்று அநுபவித்து, அவற்றால் ஆன்ம சந்தோடம் பிறக்கும்போதும் இச்சந்தோடம் அவ்வருளால் உண்டாயதென்று அவ்வருளுக்காக்கி நிற்கவேண்டும், ஆகலின், “தாமருளாலுண்டு” என்றார்.

சகல கேவலங்களை நீக்கிச் சுத்தாவத்தையில் நின்று, தம்மைச் சிவத்திற்கு ஊணாக்கி நிற்றலான், முன்னர் இதமாய்த் தோன்றிய விடயபோகமும், அகிதமாய்த் தோன்றும் ஆகலின், அதனை ருசிப்பித்து நின்ற திரோதை சத்தி நீங்கும். அத் திரோதைசத்தி நீங்கவே, இருவினைப் பயன்களும் சமமாய்த் தோன்றும். இவை சமமாய்த் தோன்றவே இவ் விருவினைப் பயன்கட்கீடாய்ச் சிவன் சுத்தமாயையில் நின்று செய்யும் பஞ்சகிருத்தியங்களு ஞ் அச்சுத்த மாயையும் நீங்கும்.

அவன் அவள் அது என்னும் முன்னிலைச் சுட்டொழிந்து, அவ்விருவினைப் பயன்களைத் தருவது அருளென்றறிந்து அவ்வருளின் மறைந்து நின்று, அவ்விருவினைப் பயன்களையும் அவ்வருளால் தாமுண்டலால் கன்மமல நீங்கும். இங்ஙனம் நீங்கவே பரையோகம் உண்டாம். இப்பரையோகத்தால் இவ்வுடம்புந் தாம் அன்றென்று நீங்க வரும். இவ்வுடம்பு நீங்கவே மாயை நீங்கும், ஆநந்தாநுபவத்தில் தற்போதங் கெடும். இத்தற்போதங்கெடவே இப்போதத்திற்குத் தான் அல்லாத உடம்பைத் தானென்றும், தனதல்லாத போகத்தைத் தனதென்றும் மாறுபாடாய்க் கருதப்பண்ணி நின்ற ஆணவங்கெடும் ஆகலின், ”தாமழியப் பஞ்சமலக்கொத்தறும்” என்றார்.

இங்ஙனங் கூறியவாறு நிட்டைகளால் பஞ்சமலங்களையும் நீக்கக்கூடாதவர் நகாரமாகிய திரோதையையும், மகார மாகிய மலத்தையும் பின்னிட்டு, சிகாரமாகிய சிவத்தையும், வகாரமாகிய அருளையும் முன்னிட்டு, யகாரமாகிய தான் நகார மகாரமாகிய பாசத்திற்குஞ், சிகார வகாரமாகிய பதிக்கு நடுநின்று , வகாரமாகிய அருளைக் கூடிச் சிகாரமாகிய சிவாநுபவத்தில் வகாரமாகிய அருள் கழலாது, யகார மாகிய தற்போதங்கழல.

இங்ஙனம் அவ்வருளே நாவாகச் செபியாமற் செபித்துச், சிகாரமாகிய சிவத்தில் அதீதப்படுவது பஞ்சாக்கரதரிசனம். இங்ஙனம் பஞ்சாக்கர தரிசனமும் பண்ணி மெய்யடியார்க்கும் பணிவிடை செய்யின் முற்கூறிய நிட்டைகளுங் கைகூடிப் பஞ்சமலங்களும் அறும், ஆகலின், “அஞ்செழுத்தா வர்ச்சித் தடியார்க் கடிமை செயின், பஞ்சமலக் கொத்தறும்” என்றார்.

இங்ஙனம் பஞ்சாக்கர தரிசனம் பண்ணுதல் சிவனுக்கருச்சனையாகலின் “அஞ்செழுத்தா லர்ச்சித்து ” என்றார்.

தேவரீர் அருளிச்செய்த சுத்தத்தை அடியேன் பெறுவது எந்த நாள் என்று இரங்கிய மாணாக்கனை நோக்கி மேல் அருளிச் செய்கின்றார்.