ஒழுவிலொடுக்கம்

23. பெண்ணா ணலியாய்ப் பிறந்து வளர்ந் தேயழியு

பெண்ணா ணலியாய்ப் பிறந்து வளர்ந் தேயழியு
மெண்ணாத பேத மியல்பின்றிப் – பண்ணுங்காற்
காரணகத் தாவொருவ னுண்டவனைக் காட்டுநூ
லாரணமு மாகமமு மாம்.

(இ-ள்.) இயல்பு இன்றி எண்ணாத பேதம் பெண் ஆண் அலியாய்ப்பிறந்து வளர்ந்தே அழியும் பண்ணுங்கால் காரண கத்தா ஒருவன் உண்டு – ஓர் இயல்பு இன்றி அநந்த பேதங்களாயும் பெண் வடிவமாயும் ஆண் வடிவமாயும் இவ்விருவகையும் கூடிய அலிவடிவமாகியும் தோன்றி நின்று அழியப்பட்ட இத்தேகாதி பிரபஞ்சத்திற்குத் தற் சுதந்திரம் இன்மையால் தானே காரியப்பட மாட்டாது. ஆகலின், இதனை அநாதியிலே படைத்தற்கு நிமித்தகாரணனாகிய கருத்தன் ஒருத்தன் உண்டு; (அஃது எங்ஙனம் எனின்).

அவனைக் காட்டும் நூல் ஆரணமும் ஆகமமும் ஆம்– அக்கருத்தனை அறிவிக்கும் நூல்கள் வேதாகமங்கள் ஆகும் (இவற்றான் அறிந்து கொள்ளுதி.)

(வி-ரை.) காரியங்கள் உண்டாவதற்குக் காரணம், முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தகாரணம் என் மூன்று வகையாயிருக்கும். இவற்றுள், முதற்காரணம் மண், துணைக்காரணம் தண்டசக்கரம், நிமித்தகாரணம் குலாலன், நிமித்தகாரணனாகிய குலாலன் முதற்காரணமாகிய மண்ணினின்றும் துணைக்காரணமாகிய தண்ட சக்கரங்களைக்கொண்டு, கட கலசாதி காரியங்களை உண்டாக்குவன்  அதுபோல்,

குலாலன் போலும் நிமித்த காரணனாகிய சிவன், மண்போலும் முதற்காரணமாகிய மாயையினின்றும் தண்ட சக்கரம்போலுந் துணைக்காரணமாகிய தனது கிரியாசத்தியால், தநு கரண புவன போகங்களாகிய காரியங்களை உண்டாக்குவனாகலினும், கட கலசாதி காரியங்களைக் கண்டு இவற்றைக் காரியப்படுத்துங் குலாலன் ஒருவன் உளனென்று அறிவது போலும் தநுகரணாதிகளைக் கண்டு இவற்றைக் காரியப்படுத்தும் கருத்தா ஒருத்தன் உளனென்று அறியவேண்டுமாகலினும், “பண்ணுங்காற் காரணகத்தா வொருவனுண்டு” என்றார்.

மற்றைய நூல்கள் இவற்றைப்போல் உண்மையாய் அவனை அறிவிக்க மாட்டாவாகலின், “அவனைக் காட்டு நூலாரணமு மாகமுமாம்” என்றார்.

பெண் ஆண் என்னும் பன்மை போல் அலியையும் பன்மையாகக் கூறினமையாற் பெண்ணாணுக்குரிய குறிகள் இருவகையும் இன்றிய புல் முதலியனவும் புழு முதலியனவும் அலியெனக்கொள்க.

பண்ணுங்கால் என்னும் ஏழனுருபை நான்கனுருபாகக் கொள்க.

காரியங் காரணங்கண் முதறுணை நிமித்தங் கண்டாம்

பாரின்மண் டிரிகை பண்ணு மவன் முதறுணை  நிமித்தந்

தேரின்மண் மாயை யாகத் திரிகை தன் சத்தியாக

வாரியன்கு லால னாய்வின் முக்குவ னகில மெல்லாம்”.

என்பது சித்தியார்.

இத்திருவெண்பாவால் பதி ஒன்று உளதென்று அறிவித்தவாறு காண்க.