உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
ஒழுவிலொடுக்கம்
ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
சிறப்புப்பாயிரம்
நேரிசை வெண்பா
வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்
வள்ளன்மலர்த் தாடலைமேல் வைத்துரைத்தா-னுள்ளத்
தழிவிலடுக் குந்தேனை யன்பெரெலா முண்ண
வொழிவி லொடுக்க நூ லோர்ந்து.
இச்செய்யுள் கருதிற் றியாதோவெனின், இந்நூன்முகத் தாசிரியர் பெயர் முதலியவற்றைக் குறித்து நிற்றலிற் சிறப்புப்பாயிர வொழுக்க முணர்த்தல் கருதிற்றென்க.
ள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன் வள்ளன்மலர்த் தாடலைமேல் வைத்து என்பது :– வள்ளலாரென்னுந் திருப்பெயருடையவர், ஞாநாசாரிய நிருபராகிச் சமையவாதிகள் தருக்கச்செருக்குகள் பிற்பட்டொழியப் பேரருள் நெறியான் வெற்றிகொண்டு, சீகாழியென்னுந் திருநகர்க்கண்ணே,மெய்ந்நெறி விளங்க, வீற்றிருந்தருளிய திருஞானசம்பந்தப்பிள்ளையாரது
வள்ளற்றன்மையுடைய, மலர்போலுந் திருவடிகளைத் தமது நன் முடிக்கண் ஓர் பொன் முடியாக அணிந்து.
ஓர்ந்து – உள்ளத் – தழிவிலடுக்குந்தேனை யன்பரெலாமுண்ண – வொழிவி லொடுக்கநூ லுரைத்தான் என்பது :- அத்திருவடிகளின் அருட்டுணையால் தத்துவங்களனைத்துஞ் சடமென்றோர்ந்துணர்ந்து, அவற்றைக்கடந்து, தற்காட்சியோடு திருவருட்காட்சியுஞ்செய்து, அங்ஙனம் வாதனையானசைந்தெழும் போதந்தோற்றாது, அதனையத்திருவருளொளியி னடக்கி ஆண்டு, மேன்மேலுமெழாநின்ற, சிவானந்தத்தேனைத் தாம் அனுபவஞ்செய்தவாறு, அதன்கண் அன்புள்ள பக்குவருஞ் செய்தற்பொருட்டு,
அச்சிவானந்தானுபவ அந்தரங்கமெல்லாம் வெளிப்பட்டு விளங்க, ஒழிவிலொடுக்கமென்று ஓர் உபதேச முறையை யுரைத்தருளினார் – என்றவாறு.