இங்ஙனம் குருராயனென்பதிற் கு வ்வென்பது – இருள், ரு வ்வென்பது – அருள், – ராயன் என்பது விளங்கச் செய்கின்றோன் – பொருளாம்.
இதனால் குவ்வென்னும் அசுத்தாவத்தையில் நின்றோரை ரு வ்வென்னுஞ் சுத்தாவத்தையில் தாம் நின்றவண்ணம் நிறுத்துகின்றோர் குரு ஆவர். இச்சுத்தாவத்தைக்கு ஆதாரனாகியும் அதீதனாகியும் விளங்கி இவ்வவத்தையினின்றும் அக்குருவாயினோர் தாழாத வண்ணம் அருள் செய்து நின்று அதீதப்படுத்துகின்றோன் ராயன் ஆவன் ஆகலின், இதனாலும் உணர்கவென்க.
எழுத்தாதிப்பல்வகைக் குறிப்பிற் பொருணெறிபற்றி நின்ற நோக்கம், செறிவு, நுட்பம், இங்கிதம், இன்பம், கம்பீரம், சிறப்புறுதி, முதலிய நற்குணந் தழீஇய சொற்புணரீதென்றே, ஆசிரியரும் சரியாதி நான்கினுக்கும் * என்னுந் திருவெண்பாவினிடைக்கட் குருராயனென்று இதன் பெருமை தோன்ற வைத்தனரென்க. இஃது இன்னும் விரிக்கிற் பெருகுமென்க.