வாதுவென்ற சம்பந்தன் என்பதிற்பொதுவானே வாது வென்ற என்றது என்குறித்தோவெனின், – எண்வகைக் குன்றத் தெண்ணாயிரவராய பாயுடுக்கைப் பறிதலைச்சமணர்களொருங்கே கூடித்தென்மதுரைக்கட் செந்தமிழ்ப் பாண்டியனை முன்னிட்டுச் செருக்காற்செய்த சுரவாதம், அனல்வாதம், புனல்வாதங்கள் பிற்படத்திருநீற்றானுந் திருவாக்கானும் வென்று திறல் கொண்டமையன்றியும், பரசமயகோளரியென்று தானே யொலித்த திருச்சின்னத்தின் தெய்வப்பேரொலி கேட்டு, உளம்பொறாது எதிரிட்டு மறித்த போதமங்கைப் புத்தநந்தியின் பொய்த்தருக்கமும், புழுத்தலையும், பொடிபட்டழியவும், பின்னர் உள்ளது போன்றில்லதைப்பற்றிச் சாக்கியக் குழுவுள் தலைவனாய சாரிப்பத்தன் சிற்சிலவகையாற் செய்த சமையவாதந்தலை தடுமாறவும், செந்தமிழ் வேதத்திருமுறை தாங்கி மேப்படும் அறிஞரான் வெற்றி கொண்டமையும் திருவோத்தூரின்கண் அரனுக்கிடுபனை ஆண்பனையாயிற்றே யென்று, அசதியாடிய அமணக்குழூஉக்களின் வாய்வாதங்கள் மண்பட்டொழியத் தாம் திருவாய்மலர்ந்த திருக்கடைக்காப்புள் ஓர் மொழியானே அவ்வாண்பனை பெண்பனையாகச் செய்து விறல் கொண்டமையுங் குறித்ததென்க.
அல்லதூஉம், வாது என்பது இலக்கணையாகக்கொண்டு பெருமண நல்லூரின்கண் திருமண நல்விழாவைத் தரிசிப்பான் வந்த மக்கட்கெல்லாந் தொன்று தொட்டு இடைவிடாது உடனிழற்போற் சூழ்ந்துள பிறவிப் பெருவாதுகளனைத்தும் வென்றதூஉம், – திருப்பாச்சிலாச்சிராமத்தின்கண் மழவன் மகளார்க்கு அடுத்த முயலகவாது வென்றதூஉம்,– மருகற்கண் ஓர் வசியனுக்கு அடுத்த விடவாது வென்றதூஉம், — இவை முதலியவுங் குறித்த தெனினுமாமென்க. வெற்றி கொண்ட பொருட்டிறன் முதலியவற்றுள் ஒன்றேனுந் தோன்றக்கூறாது
* ஒழிவிலொடுக்கம். 3. சத்திநிபாதத்துத்தமரொழிவு 1-ம் திருவெண்பா.
சரியாதி நான்கினுக்குஞ் சாலோக மாதி
வருமா றெனக்களித்த வள்ளல் – குருராயன்
ஞானத்திற் பக்குவர்க ணால்வர்க் குபதேசம்
ஆனத் தையு நிகழ்த்தினான்.
இலேசானே வாதுவென்ற என்றது என் குறித்தோவெனின்,- பிறர்க்கு இங்ஙனம் வேறல் தம்மானுந்துணைமையானும் பற்பலநாட் பற்பலவகையின் முயற்சி செயினு முற்றாதெனினும், பிள்ளையார்க்குச் செந்தமிழ் பொழியுந் திருவாக்கானே ஆண்டாண்டு அவ்வேறல் முற்றியதென்பது குறித்தென்க.
வாது என்பது குரு ராயன் என்பதனோடுஞ் சம்பந்தன் என்பதனோடுஞ் சாராது நடுநின்றமையின், அத்துவித நெறியினுஞ்சேராது, துவிதநெறியினுஞ் சாராது நின்ற பதிதவாதிகளது பயனில்வாதமெனினும் அமையுமென்க.
எதிரேற்கப்பட்டு எதிர்வினைக் கீழ்ப்பட மேற்கொள் வினையெழுச்சிப் பொருளின் வந்த வெல் என்னும் பிறவினைப் பகுதியானடுத்த வென்ற என்னும் பெயரெச்சஞ் சம்பந்தனென்னும் பெயர் கொண்டு முடிந்து, இங்கனம் வெற்றிகொண்ட பருவம் பிள்ளையார்க்கு இளங்குமாரப் பருவமெனக் குறித்ததென்க. என்னை? எச்சமென்பது இளஞ்சேய் மேற்றாகலின்.
சம்பந்தன் என்பது பிள்ளையார்க்கு மூவகவைக்கண் மூவுலகும் புகழப் பொற்பொடு புணர்ந்த அற்புதத் திருப்பெயராகலின், ஆண்டு பெருமானருளப் பிராட்டியார் அளித்த சிவஞானத் தெள்ளமுதருந்தி அச்சிவஞானத்திற்கு உரிமை பூண்டமை குறித்ததென்றுணர்க.
ஆயின் சிவஞான சம்பந்தன் என்னாது சம்பந்தனெனவைத்த தென் கொலோவெனின் :- சிவஞானமுமன்றிச் சிவானந்தமானந்தாதீதம் என்பவைக்கும் உரிமை பூண்ட தலைமைபற்றியும் அவற்றை உலகுயிர்க்கு இங்கன மென்றுணர்த்தி உரிமை செய்விக்கு மாட்சிபற்றியும் அங்கனம் வைத்ததென்க.
அல்லதூஉம், சுருங்கச் சொல்லுதல் வனப்பினாற் சம்பந்த னெனவே சிவஞான சம்பந்தன் என உரிமைச்சிறப்பு வழக்கால் தானே தோன்று மெனவைத்த தெனினுமாமென்க. எங்கனமெனின், இந்திரனென்பது இறைமைச்சிறப்பு வழக்கால் தேவேந்திரனையும் உடையா னென்பது பொருட்சிறப்பு வழக்கால் பொன்னுடையானையுங் குறிக்கு மாகலினென்க.