ஒழுவிலொடுக்கம்

24. தன்னை யறியாது வேறுண்டாய்த் தானறியா

தன்னை யறியாது வேறுண்டாய்த் தானறியா
துன்னிலொழி வாமுதிப்பீறொன்றுமிலைச் – சந்திதிக்கே
யஞ்சுதொழி லாமதனை யாநந்த வாக்காலே
கிஞ்சளவு கேட்கலுமா கும்.

(இ-ள்.) தன்னை அறியாது வேறு உண்டாய்த் தான் அறியாது உன்னில் ஒழிவு ஆம் உதிப்பு ஈறு ஒன்றும் இலை- நீர் கூறிய சிவம் தன்னை அறிந்து கொண்டு இருக்குமோ எனின், மலரகிதமாயிருத்தலின், அது தன்னை அறியாது. மற்றோர் பொருளைத்தான் அறிந்துகொண்டு இருக்குமோ எனின், தனது பூரணத்தில் சகலமும் அடங்கியிருக்கும் ஆகலின், தனக்கு வேறாய் ஓர் பொருளுண்டாய் அதனை அறியாது.

நினைவோடுதான் கூடியிருக்குமோ எனின், நினைப்பு உண்டெனின் மறப்பு உண்டு ஆகலின்; அது நினைப்பும்மறப்பும் இன்றிய நிருவிகாரி. அதுதான் ஓர் காலத்து உண்டாயதோ எனின், உற்பத்தி உண்டெனின் நாசமும் உண்டு. அஃது அநாதி நித்தியம் ஆகலின், உற்பத்திநாசங்கள் ஒன்றும் இல்லை.

(இங்கனம் மலரகிதமாய்ப் பரிபூரணமாய் நிருவிகாரியாய் அநாதி நித்தியமாய் இருந்துள்ள அச்சிவம் எங்ஙனம் மாயையைக் காரியப்படுத்தும் எனின்,)

சந்நிதிக்கே அஞ்சு தொழில் ஆம் அதனை ஆநந்தவாக் காலே கிஞ்சு அளவு கேட்கலும் ஆகும் – அச்சிவத்தின் சந்நிதிக்கண்ணே பஞ்சகிருத்தியங்கள் உளவாம். அக்கிருத்தியத்தை ஆன்மாக்கண்மேல் வைத்த காருண்ணியத்தால் மௌனாநந்தந்ததும்பி அதுகூறும் ஆநந்தவாக்கால் சிறிதளவு கேட்கலும் ஆகும்.

(வி-ரை.) சூரியன் இச்சாயத்தனம் இன்றி இருக்கவும் அவன் சந்நிதியில் ஒன்று முகையாயும், ஒன்று அலர்ந்தும், ஒன்று உலர்ந்தும், தாமரை முத்தொழிற்படல்போல், சிவசந்நிதானத்திலே மாயையில் சிருட்டியாதி தோற்றலால், “சந்நிதிக்கே அஞ்சுதொழிலாம்” என்றார். ஆந்தவாக்கு வேதாகமங்கள்.

“கிஞ்சளவு கேட்கலுமாகும்” என்றமையால், பஞ்ச கிருத்தியத்தின் பெருமையை அளவிடக் கூடாதென்பது ஆயிற்று.