கடல்சிவநீ ரான்மா வுப்புமலங் கன்ம
மடர்வாயுப் போத மலைகா – ணிடைவிடா
தவ்வாதி யுட்கரண மைம் பொறியிற் பம்பரம்போ
லிவ்வா றுனைச்சுழற்று மெண்
(இ-ள்.) கடல் சிவம் நீர் ஆன்மா உப்பு மலம் அடர் வாயு கன்மம் அலைபோதம் – கடல்போலுஞ் சிவம், அதனுள் நீர்போலும் ஆன்மா, அந்நீருள் பிரிபடா திருந்த உப் புப்போலும் ஆணவம், அந்நீரின் மேல் வீசுங் காற்றும் போலும், கன்மம், அக்காற்றான் எழும் அலைபோலும் போதம்; (ஆகிய இவற்றுள்),
இடைவிடாது அவ்வாதி உட்கரணம் ஐம்பொறியில் பம்பரம் போல் இவ்வாறு உனைச்சுழற்றும் எண்- காற்றைப்போன்ற கன்மத்துக்கீடாய் இச்சா ஞானக் கிரியைகள் பஞ்சமூர்த்திகளைச் செலுத்த, இப்பஞ்ச மூர்த்திகள் அகாரமுதலிய அக்கரங்களைச் செலுத்த, இந்த அக்கரங்கள் மனமுதலிய உட்காரணங்களைச் செலுத்த, இவ்வுட்கரணங்கள் ஐம்பொறிகளிடத்து இடைவிடாது உன்னைப்பம்பரச் சுழல்போலும் இங்ஙனம் எக்காலும் சுழற்றும் என்று அறிதி.
(வி-ரை.) அவ்வாதிகளைக் கூறினமையால் இவற்றிற்கு முதற்காரணமாகிய இச்சா ஞானக்கிரியை முதலிய வருவிக்கப்பட்டன. காற்றால் அலை எழல்போல் ஆன்மாக்கள் கன்மத்து கீடாய்ப் போதம் பலப்பட விரிதலின் அங்ஙனங் கூறினார்.
காண் – அசை.
இத்திருவெண்பாவால் திருவருள் ஆன்மாக்களைக் கன்மத்துக்கீடாய் நடத்துமாறும், அவ்வான்மாக்கள் கரணங்களோடுங் கூடி இந்திரியவழிச்சென்று விடயங்களைப் புசிக்குமாறும் இங்கனம் என்று அறிவித்தவாறு காண்க.