அடுக்குந்தேன் என்பதில் அடுக்கும் என்பது அடுத்தல் என்னுந் தொழிற் பெயர்க்கண் தல்விகுதி தன்னொற்றுச் சந்தியொடு நீங்க எதிர்காலப் பெயரெச்ச இடைநிலை உம்மை ககரமெய்ச்சாரியை யூர்ந்து தன்னொற்றுச் சந்திபெற்றாண்டு நின்று இறையுமிடப்பாடு தோற்றாது செறிதற் பெயர்ச்சியும், அடுக்கலென்னுந் தொழிற் பெயர்க்கண் அல் விகுதி நீங்க அவ்வெதிர்காலப் பெயரெச்ச இடைநிலை உம்மை விகுதிநீங்க நின்று தன்வரவு கண்டோடிய குற்றுகர மூர்ந்த மெய்க்கண்ணேறி நின்று இறையுமிடைப் போதின்மை படாது பன்முறை மேன்மேலுறு தற்பெயர்ச்சியும் பொருளாகக்கொண்டு இருவகைப்பகுதி யொருவகை யெச்சமாக நிற்றலின், சிறிதும் இடத்தானுங் காலத்தானும் பிரிவு தோன்றாது செறிந்து பன்முறை மேன் மேலெழும் ஆனந்தத் தேனென்று குறித்த தென்றுணர்க.
உள்ளத்தழிவிலடுப்பது ஆனந்தமாகலின் தேனென்பதை உவமைக்குறிப்பாற் சிவானந்தத் தேனென்றதென்றுணர்க.
தேனுண்ட வண்டு அசைவின்றி அத்தேன்மயமாயிருத்தல் போல, ஆனந்தானுபவத்தர் போதவசைவின்றி இவ்வானந்த மயமாயிருத்தலின் உமையாகக் குறிக்கப்பட்டதென்றுணர்க.
இதனை ஒப்புமைக்கூட்டு ஒட்டு ஆதிகளாகக் கூறுவாருமுளராலோ வெனின், அவ்வாறு கூறினும் பொருள் சிதையாமையி னொருவாறமையுமென்க. போதவசைவின்கண் தோற்றல் விடயானந்தம் ஆகலில், போதவொழிவின்கண் தோற்றல் சிவானந்தமெனக் குறித்தற்கு உள்ளத்தழிவிலடுக்குந் தேனென்ற தென்றுணர்க.
எங்ஙனமெனின், உள்ளத்தழியாமையின் அடாத்தேன் என்று எதிர்மறுக்கப் படுதலினென்க. மதுரம்பற்றித் தேனை ஆனந்தத்திற்கு உவமை கூறுவாரு முளராலோ வெனின், அது நாவிடயமாய் இறைப்போது நிற்றலின் இத்துணைச் சிறப்பின்றென்க.