கிரியையான் ஞானங் கிடைத்தாலுங் கேடு
கருவால் வருவது போற் காணு – மொருகோடி
சூரியரைக் கூரிருளா லேசுருட்ட னீரகில
காரணனைத் தீண்டநினைக் கை.
(இ-ள்.) கிரியையால் ஞானம் கிடைத்தாலும் கருவால் வருவது போல் கேடு காணும் –கிரியைத்தொழிலால் ஞானம் கிடைத்ததாயினும், அந்த ஞானத்திற்குக் கர்ப்பத்தின்கண் உற்பத்தியாய் வரும் பொருள்கள் போல கேடுண்டாம்; (அஃதன்றி)
ஒரு கோடி சூரியரைக் கூர் இருளாலே சுருட்டல் நீர் அகில காரணனைத் தீண்ட நினைக்கை – சடசித்துக்களாயுள்ள பிரபஞ்சங்களை யெல்லாங் கடந்து நின்றும் அவற்றை நடத்தும் காரணனாகி யிருந்த சிவனை நீர் உமது கிரியையால் தொடர்ந்து பற்றக் கருதுவது ஒரு கோடி சூரியரை மிகுந்த இருளினால் சுருட்டிப் பிடித்தல் போலும்,
(வி-ரை.) சரியை கிரியை யோகங்கள் ஞானாசாரியரை அடைதற்குப் பக்குவம் ஆக்குவன அன்றி, ஞானத்தைக் கொடா; ஆயினும். முன் விட்ட குறையால் கிரியை அநுட்டிக்குங்காலை ஓர்கால் ஞானம் தோன்றிற்றாயினும், அந்த ஞானம் ஞானாசாரியரால் பெறாமையானும், தான் செய்யும் கிரியை மேலீட்டானும் நிலைபெறாது மறையும். ஆகலின், கிரியையான் ஞானங்கிடைத்தாலும் என்றும், கருவால் வருவது போற்கேடு என்றும் கூறினார்.
ஞானத்தால் சிவத்தைப் பெறவேண்டும் என்பது அறியாது, மாயா காரியமாகிய கிரியையால் அதனைப் பெறத் தொடங்கலின், ஒரு கோடி சூரியரைக் கூரிருளாலே சுருட்டல் என்று உவமை கூறினார்.
கிரியை ஏதுவால் ஞானம் வந்ததாயினும் நண்டு இப்பி முதலிய தமது கருவால் நாசமாவனபோல் அந்த ஞானமேலீட்டால் கிரியை கெடும் என்பதும் ஆம்.
இத்திருவெண்பாவால் கிரியை அநுட்டிக்குங்காலைத் தெய்வகதியாய் ஞானம் தோன்றிற்றாயினும், அக்கிரியை மேலீட்டால் அந்த ஞானம் நிலைபெற்று நில்லாது மறையும் என்று அறிவித்தவாறு காண்க.