ஒழுவிலொடுக்கம்

129. சுகாதீதம் வேண்டிற் றொழில் செய்வோ மென்றா

சுகாதீதம் வேண்டிற் றொழில் செய்வோ மென்றா
னகாரோ துயில்வார் கடந்தோ – விகாரமெனச்
சாத்திரமும் பூசைச் சமாதிகளுஞ் சார்போதக்
கோத்திரங்காண் மாயைக் குழாம்.

(இ-ள்.) சுகாதீதம் வேண்டின் தொழில் செய்வோம் என்றால் நகாரோ நடந்தோ துயில்வார்- ஆநந்தாதீதமாகிய வீடடைய விரும்பின், அதனை அறிவிக்கும் ஞானாசாரியரை அடைந்து அருள் ஞானம் பெற்று, இவ்வருள் ஞானத்தால் அவ்வீடடையாது விடுத்து, கிரியைத் தொழிலான் அவ்வீடடையலாம் என்று கருதி அக்கிரியைகளைச் செய்வோம் எனின், மெய்ஞ்ஞானிகள் நகை செய்யாரோ? அஃதென்னெனின், நித்திரை பண்ணவேண்டினோர் ஒரிடத்துப் படுத்துக்கொண்டு நித்திரை பண்ணுவதன்றி, ஒரூர்வழி கடந்து சென்றோ நித்திரை பண்ணுவார்? (அஃதன்றி),

விகாரம் எனச் சாத்திரமும் பூசை சமாதிகளும் சார் போதக் கோத்திரம் மாயைக்குழாம் – ஞானிகளோடு மாறுபட்டது போன்று நீர் ஓதும் சாத்திரமும், அந்தரியாக பூசையில் ஓர்வடிவைத்தியானித்து நீர் சமாதி கூடுதலும், உமது சார்போதத்தின் கூட்டமும், மாயைக் கூட்டமும் அவை.

(வி-ரை.) போத ஒழிவில் நின்ற சுகாதீதத்தை விரும்பினோர் கருவிகள் ஒழிந்தபோதும் அசைவறாதபோதும் அவைகளோடு கூடித்தொழில் செய்தால், நெய்சொரிதழல் போல் மேன் மேல் வளர்தலின், ”சுகாதீதம் வேண்டித் றொழில் செய்வோமென்றால்” என்றும், இத்தொழிலால் அச்சுகாதீதம் பெறுதல் அரிதென்பதும் ஞானிகளறிவார் ஆகலின், “நகாரோ” என்றுங் கூறினார்.

தேகம் அசைந்து செல்லும்போது நித்திரைவரினும், அவ்வசைவு அந்நித்திரையை வரவொட்டாது தடுத்தல் போல, கருவிகள் அசைந்து தொழில் செய்யும்போது தெய்வகதியால் ஆநந்த நித்திரைவரினும், இத்தொழில் அந்நித்திரையை வரவொட்டாது தடுக்கும் ஆகலினும், தேகம் அசைவற ஓரிடத்துக் கிடந்தபோது நித்திரை நன்றாய் வருவது போல, கருவிகள் தொழில் செய்யாது அடங்கியபோது ஆநந்தநித்திரை நன்றாய்வருமாகலினும் “துயில் வார் நடந்தோ ” என்றார்.

போதம் ஒன்றாயினும் அடுத்த கருவிகள் தோறும் அதனதன் மயமாய்ச் சென்றிருத்தலின், ”சார்போதக் கோத்திரம்” என்று பன்மையாகக் கூறினார். “மாயைக் குழாம்” என்றது கருவிகளை, போதமும் கருவிகளும் கூடிச்செய்தலான் இரண்டையுங் கூட்டிக் கூறினார். பாசஞானம் பசுஞானம் என்றும் ஆம்.

காண் – அசை.

இத்திருவெண்பாவால் கருவிகளையும் போதத்தையும் கடந்து நின்ற சுகாதீத முக்தியை அவற்றாற் செய்யும் கிரியைகளால் அடையக்கூடாதென்று அறிவித்தவாறு காண்க !