குடையுஞ் செருப்புங் கொடுநடப்ப தல்லாற்
படியும் விசும்பும் பரப்பி – யிடையாடு
மாத்திரம் போலேசமைய வாதமனம் போதாத
சாத்திரங்கற் றார் வீடுற் றார்.
(இ-ள்.) குடையும் செருப்பும் கொடு நடப்பது அல்லால் படியும் விசும்பும் பரப்பி இடை ஆடும் மாத்திரம் போலே – ஓர் ஊருக்குச் செல்லவேண்டினோன் உடம்பில் மழை வெயிலாதிகள் படாது கையில் குடையும் பிடித்துக் கொண்டு, காலில் கல் முள் மண் தாக்காது செருப்பும் தொட்டுக் கொண்டு நடப்பதே அன்றி, ஆகாயமெங்கும் குடைபரப்பிப் பூமியெங்கும் தோல்பரப்பி அவற்றிற்கு இடையே செல்லு மாத்திரம் போலே.
சமையவாதம் மனம் போதாத சாத்திரம் கற்று வீடு உற்றார் ஆர் —சமயிகள் நானாவாகக் கூறும் தருக்க வாதங்களையும், அத்தருக்க வாதத்தால் அநந்த பேதமாய்த் தோற்றும் மனோ உத்திகளையும் அளவு கூறினும் அவ்வளவு போதாத சாத்திரங்களைக் கற்று வீடடைந்தவர் யாவர்?
(வி-ரை.) ஓர் ஊரை அடையக் கருதினோன் மேலுக்கும் காலுக்கும் துன்பம் அணுகாவகை குடையும் செருப்பும் பிடித்திட்டுக்கொண்டு சென்று அவ்வூரை அடைவது போல், வீடடையக்கருதினோன் ஆசாரியர் கூறும் உபதேச மொழிகளும் அவர் கொடுக்கும் ஓர் சாத்திரமுங் கொண்டு, அவற்றின் அருத்தப்படி திரிகரணங்களால் ஒன்றையும் வருந்திச் செய்யாது தற்போதத்தையே ஒழித்து அவ்வீட்டை அடையாது, அளவிடப்படாத ஆகாயத்திலும் பூமியினும் குடையும் தோலும் பரப்பி நடுவிடைச்செல்லத் தொடங்குவோனைப்போலும், தருக்கவாதங்களையும் அவ்வாதத்தாலெழும் மனோவுத்திகளையும் அளவிடினும் அளவிடப்படாத சாத்திரங்களைக் கற்று நீர் வீடடையத் தொடங்குவது என்பதும், சில கற்பினும் அதனால் வீடு கூடாதென்பதும் இதனாற் காண்க.
சாத்திரங்களை மிகவுங் கற்றோர்க்குத் தருக்கவாதமும் மனோவுத்தியும் மிகவும் விரியும் ஆகலின், சாத்திரங்கட்கு அளவு கூறுவார் வேறு கூறாது அவற்றையே அளவு கூறினார்.
வாதம் என்பதும் மனம் என்பதும் ஆகுபெயர்.
இத்திருவெண்பாவால் அபரஞானத்தால் வீடடையக்கூடாது என்று அறிவித்தவாறு காண்க.