மருண் மூகர் வாக்கறிய வல்லரோ மாயா
விருளே யொளியா யிருப்ப – ரருளுருத்த
பேயரைப்பே யென்னாரோ பித்தநாப் பாலிருட்கண்
பார்வைக்குப் பானு பகை.
(இ-ள்.); மருள் மூகர் வாக்கு அறிய வல்லரோ மாயா இருளே ஒளி ஆய் இருப்பர் – பித்தமேறிய ஊமர்கள் நல்லறிவாளர் கூறும் அறநெறி வாக்கினை உட்கொண்டு அறியவல்லரோ? அதுபோல், உலகத்தர் ஞானிகள் கூறுந்திருவாக்கான் ஆயினும் அவர்களை ஞானிகளென்று அறியவல்லரோ? அஃதன்றி, தாங்கற்ற நூலறிவும் சரியையாதிகளுமாகிய மாயாவிருளைத் தானே ஞானப்பிரகாசமாக் கருதிக்கொண்டிருப்போர்,
அருள் உருத்த பேயரைப்பேய் என்னாரோ பித்தநா பாலிருட்கண் பார்வைக்குப் பானு பகை – மும்மலங்களையும் தற்போதத்தையும் கோபித்த அருளாகிய பூரணப்பேய் பிடித்த பேயரைப் பேயரென்று சொல்லார்களோ? அங்ஙனம் இருந்தோர் இங்ஙனம் இருந்தோரைப் பேயரென்று இகழ்வான் ஏன் எனின் மதுரமாகிய பால் பித்த மேறிய நாவிற்குப் பகையானது போலும், பேரொளிப் பிரகாசமாயிருந்த பானு இருளை ஒளியாகக்காணும் இருட்கண் பார்வைக்குப் பகையானது போலும், ஆநந்தமும் திருவருளும் மலமேலீட்டால் அவர்க்குப் பகையாமாகலின், இவற்றைப் பெற்ற ஞானிகளும் பகையாத் தோற்றுவர், இஃதே அவரிகழ்தற்குக் காரணம் என்று அறிதி
(வி-ரை.) “மருண் மூகர் வாக்கறிய வல்லரோ” என்றது உலகத்தார்க்கு உவமை.
நூலுணர்ச்சியோடும் சரியையாதிகளினிற்போர் இகழ்வாரென்றது பரஞானம் இன்மையால் எனக்கொள்க. பானுப்பகை என்பதனைப் பால் என்றதனோடுங் கூட்டுக. கைப்பாயும் இருளாயும் மாறுபடத் தோற்றலின் “பகை” என்றார்.
இத்திருவெண்பாவால் ஞானிகளது மகிமையை உலகத்தாரும் சரியையா திகளினிற்போரும் மெய்யுணர்ச்சியின்மையான் அறியார்களென்று அறிவித்தவாறு காண்க. ஞானிகள் மகிமையை மானிடரறியாராயின், அறிவார் ஆர் எனின், மேற்கூறுகின்றார்.