மறவாத தம்மை யறிவார் மருளோ
வறிவோ விடயம்போலாகி – லறிவை
யறிவதறி வாகையினா லாறாறுந் தத்த
மறிவையறி யாபோ லறி.
(இ-ள்.) மறவாத தம்மை அறிவார் விடயம் போல் ஆகில் மருளோ அறிவோ -சகல கேவலங்களாகிய நினைப்பும் மறப்பும் கடந்து அறிவாய் மறவாதிருந்த தம்மை மறந் தது போல் நினைத்து அறியத்தொடங்குவோர்க்கு எதிரிட்டறியும் விடயம் போல் தம்மைத் தமக்குத் தோற்று மானால் அது மருட்போதமோ அருட்போதமோ?
அறிவை அறிவது அறிவு ஆகையினால் ஆறாறும்தத்தம் அறிவை அறியாபோல் அறி- அறிவாயிருந்த தம்மை அறியத்தொடங்குவது தம் அறிவைக்கொண்டு ஆகலின், முப்பத்தாறு தத்துவங்களும் தத்தம் அறிவைத்தாம் அறியா திருப்பனபோல் தம்மைப் பிரித்தறியாது சும்மா இருப்பதுவே தம்மை அறிவதென்று அறி நீ.
(வி-ரை.) முன் சகல கேவலமாயிருந்த ஆன்மா தன்னை யாரென்று பார்த்தபோது தான் வேறு அவை வேறாய்ப் பிரிந்தாற்போல், இப்போது சுத்தமயமாயிருந்த ஆன்மா தன்னை எதிரிட்டுப் பார்ப்பின் இச்சுத்தம் பிரிந்து கேவல சகலங்களிற் செல்லும் ஆகலின், “ஆறாறுந்தத்த மறிவை யறியாபோலறி” என்றார். நினைப்பு மறப்பு இன்றி அறிவாயிருத்தலின், “மறவாத தம்மை ” என்றார்.
இவையிரண்டு திருவெண்பாவானும் தம்மை அறிவது இங்ஙனம் என்று அறிவித்தவாறு காண்க.