ஒழுவிலொடுக்கம்

41. அருளாலே தம்மை யறிந்தருளா யந்தப்

அருளாலே தம்மை யறிந்தருளா யந்தப்
பரிபூரணமே பரையாய்ப் – பரையொழிவி
லானந்தா தீதமா மத்து வித சித்தாந்த
மோனம்வே தாந்த முடிவு.

(இ-ள்.) அருளாலே தம்மையறிந்து அருள் ஆய் அந்தப் பரிபூரணமே பரை ஆய்- முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்து நின்ற இடத்துப் பாசம் ஈது அருள் ஈது என்று பகுத்தறிந்த அறிவு தாம் என்று தம்மை அருளால் அறிந்து, பின்னர்த் தம்மையும் அவ்வருளையும் பிரித்துப் பாராது அவ்வருள் தாமாயிருந்து, பின்னர்த் தம்மைச் சிறிதுந் தோற்றாத அந்தப் பரிபூரணமாகிய பரையே ஆகி,

பரை ஒழிவில் ஆநந்தாதீதம் ஆம் அத்துவித சித்தாந்த மோனம் வேதாந்த முடிவு – பின்னர் அப்பரை நீக்கத்தில் தோன்றும் ஆநந்த மயமாகி, அவ்வாநந்தத்தையும் இங்ஙகனம் என்று அறியாது அதனுள் அதீதப்படுவதாகும் அத்து விதமான ஆகம முடிவாகிய மௌனம் வேதமுடிவிற்கு முடிவாம்.

(வி-ரை.) தனது இச்சைப்படி ஆன்மா இச்சையைச் செலுத்தியும், தனது ஞானத்தால் அதன் ஞானத்தை மறைத்தும், தனது கிரியையால் அதனது கிரியையை அடக்கியும், இங்ஙகனம் அவ்வான்மபோதஞ் சீவியாதடக்குவது அருள். அங்ஙனம் அதனது போதம் அடங்கின விடத்து முன் தோற்றிய இச்சா ஞானக் கிரியைகள் விரியாது நீங்கினவிடம் பரை. ஆகலின், “அருள்” என்றும் “பரை” என்றும் கூறினார்.

வேதாந்திக்குப் பெத்ததிசைபோல் முத்தியிலும் நானென்பது தொடர்தலின், “வேதாந்தமுடிவு” என்றார். இத்திருவெண்பாவால் ஆன்மா சிவத்தோடு இரண் டறக்கலந்த அத்துவிதம் இவ்விடம் என்பதும், இது வேதாந்த முடிவு என்பதும் அறிவித்தவாறு காண்க.