ஒழுவிலொடுக்கம்

46. மலமாயை கன்ம மயக்க விகற்ப நிலை

மலமாயை கன்ம மயக்க விகற்ப நிலை
போகப் போயொழிந்த நிட்டை – பலவோ
வறிவுக் கெதிரில்லை யாகாய நீழ
லறநிற்கு மாபோனிற் பாய்.

(இ-ள்.) மல மாயை கன்ம மயக்கம் விகற்பம் நிலை போகப்போய் ஒழிந்த நிட்டை பலவோ – ஆணவமலமாகிய மயக்கத்தைக் கேவலாவத்தையாற் போகச்செய்து, மாயையாகிய விகற்பத்தைக் குருலிங்கசங்கம வழிபாட்டாற் போகச்செய்து, கன்மத்தைச் சுத்தநிலையாகிய அருளாற் போகக்செய்து, ஆன்மா இந்த அருள் வழிச்சென்று சிவாநந்தத்தில் தற்போதம் அற்ற உண்மை நிட்டை பலவிதமோ?

அறிவுக்கு எதிர் இல்லை ஆகாய நீழல் அறநிற்குமாபோல் நிற்பாய் – இங்ஙனம் தற்போதம் அற்றுச் சிவம் என்றும் தான் என்றும் இரண்டற இருந்த அறிவிற்கு எதிரீடாய்த் தோற்றுவது ஒன்றும் இல்லை; ஆகாயம் எல்லாப் பொருள்களோடுங் கூடியிருப்பினும் அப்பொருள்களின் சாயை தன்னுள் தாக்காது நின்றாற்போல், எல்லாக் கருவிகளோடுங் கூடியிருப்பினும் அக்கருவிகளின் குணம் உன்னைச் சாராது நீ நிற்றி.

(வி-ரை.) கேவலாவத்தையைத்தரிசிக்கவே ஆணவம் நீங்கும் ஆகலானும், மனவாக்குக் காயங்களாற் குருலிங்க சங்கமத்தை வழிபடவே அம்மனவாக்குக் காயங்களாய் விரிந்த விகற்பரூபமாகிய மாயை நீங்கும் ஆகலானும், இவற்றை நீங்கிச்சுத்த நிலையில் தோன்றுந் திருவருளைத் தரிசித்து அந்தத் திருவருளே பெத்த முத்தியினும் எமக்கு உபகரிப்பது என்று அறிந்து தான் பிறர் என்னும் முன்னிலைச் சுட்டொழிந்து நிற்கவே கன்மம் நீங்கும் ஆகலானும், “மல மாயை கன்ம மயக்க விகற்ப நிலைபோக” என்றார்.

சகல கேவலங்கள் நீங்கி ஆன்மபோதமும் ஒழிந்த நிட்டைக்கு மேல் வேறு நிட்டை இன்றாகலின், “பலவோ” என்றார். ஆகாயம் தனது நுண்ணிய குணத்தில் திரிவு இன்றி இருந்தமையால் மற்றைப் பொருள்களின் நிழல் தாக்காது இருந்தது போல், ஆன்மா தனது போதஞ் சீவியாது நுட்ப குணத்தோடு இருந்தது எனின் சிவத்தோடு கலப்புக்கூடும். தூலமாகிய கருவிகளும் அதனைத் தாக்க மாட்டாது என்பது அறிக.