ஆனைமதப் பட்டா லலங்கார மன்றிநாய்
தானுமதப் பட்டாற் சரியாமோ – ஞானி
தடைமீறி னாலுஞ் சதுராகுங் கன்மி
கடைமீற லாகாது காண்.
(இ-ள்.) ஆனை மதப்பட்டால் அலங்காரம் அன்றி நாய் தானும் மதப்பட்டால் சரி ஆமோ – மதமேறா முன்னும் சிறப்புள்ள யானை பின் மதமேறித் தன் தடைகடந்து சேறினும் சிறப்பேயாம், அன்றிப் பேய் ஏறா முன்னும் இழிவுள்ள நாய் தானும் பின் பேய் ஏறினால் அதுபோலும் சிறப்பாமோ? (அவைபோலும்),
ஞானி தடைமீறினாலும் சதூர் ஆகும் கன்மி கடை மீறல் ஆகாது– முன் நின்றநிலை கடவா திருந்தபோதும் சிறப்புள்ள மெய்ஞ்ஞானி பின் ஆநந்த மேலீட்டால் அந்நிலை கடந்து சேறினும் சிறப்பே ஆகும், கருமி நிலைகடவா முன்னும் அம்மெஞ்ஞானிகட்கு இழிவாவன், தற்போதத்தால் அந்நிலைகடந்த போதும் இழிவாவன். ஆகலின், தன்னிலை கடக்கலாகாது.
(வி-ரை.) ஆனை மதமேறினால் மிகவுஞ் சிறப்பு, நாய் பேயேறினால் மிகவும் இழிவு; அவைபோல, ஞானி தடை மீறினால் மிகவும் சிறப்பு, கன்மிகடைமீறினால் மிகவும் இழிவென்பதுங் காண்க.
காண்- அசை.
இத்திருவெண்பாவால் ஞானி கிரியை செய்யினும் செய்யாவிடினும் சிறப்பாவன் என்பதும், கன்மி கிரியை செய்யாவிடின் மிகவும் இழிவாவன் என்பதும் அறிவித்தவாறு காண்க.