ஒழுவிலொடுக்கம்

63. மகவான் கண்பார்த்தவர்க்கு மாண்பாய்த் தனக்குப்

மகவான் கண்பார்த்தவர்க்கு மாண்பாய்த் தனக்குப்
பகமா யிலச்சைவிடாப் பண்பாய்ச் – சகமாணக்
கண்ணாரி போல்வேடக் கண்ணாடி காட்டு தவ
மெண்ணூழி காலமிருந் தென்.

(இ-ள்.) மகவான் கண் பார்த்தவர்க்கு மாண்பு ஆய்த் தனக்குப் பகம் ஆய் இலச்சை விடாப் பண்பு ஆய்- இந்திரனது கண்களைப் பார்த்த பெயருக்கு மாட்சிமையாய் அவ்விந்திரனுக்கு அல்குலாய் இவனது உள்ளே நாணம் விடா முறைமையா யிருந்தது போல,

சகம் மாணக் கண்ணாரிபோல் வேடக்கண்ணாடி காட்டு தவம் எண் ஊழிகாலம் இருந்து என்- தவவேடத்தைப்பார்க்கின்ற சகத்தோர்க்கு மாட்சிமையாயிருப்ப இவ்வேடத்திற்கு உரிய ஞானம் தமக்கு இன்றென்று தம்முள்ளே நாணமுற வேசிபோல் மினுக்கிய வேடமாகிய கண்ணாடி காட்டப்பட்ட தவத்தார் அளவிறந்த காலம் இருப்பினும் அவ்வேடத்தால் பயன் அவர்க்கு என்னை உளது ?

(வி-ரை) அவனுக்குக் கண்களைப் பார்க்குந்தோறும் இலச்சைவரலால், “இலச்சைவிடா” என்றார். அவனை இவர்க்கு உவமை கூறினமையால், இவர்க்கும் இவ்வேடத்தைப் பார்க்குந்தோறும் இலச்சை வரும் என்பது ஆயிற்று.

தவத்தோர்க்கு உரிய உள்ளொழுக்கமான ஞானாசாரம் ஒன்றும் தோற்றது வடிவமாத்திரையே தோற்றினமையால், ”வேடக்கண்ணாடி காட்டு தவம்” என்றார்.

இத் திருவெண்பாவால் சிவஞானம் இல்லார்க்குச் சிவ வேடத்தால் பயன் இன்று என்று அறிவித்தவாறு காண்க.

முதலதிகாரம் வேதாகமப்பொதுவிலுபதேசம்

முற்றிற்று.