வாதி வடத்தினமு மாமருத்துவன் பிணியுஞ்
சாதித்த வீரன் மேற் றம்பலமுந்-தீததுபோல்
ஞானத்தி லின்பை நசிப்பித்து நான துவா
மூனத்தை யாரொழிவிப் போர்.
(இ-ள்.) வாதி வடத்தினமும் மா மருத்துவன் பிணியும் சாதித்த வீரன் மேல் தம்பலமும் தீது அதுபோல் – பஞ்சலோகங்களையும் பொன்னாக்கினேன் என்று கூறும் இரதவாதி மிடியனாயிருத்தலும், பிறர் பிணிகளை எல்லாம் போக்கினேன் என்று கூறும் மகாவயித்தியன் பிணியனாயிருத்தலும், பகைகளை எல்லாம் வென்று சாதித்தேன் என்று கூறும் மகா வீரன் மேற் பிறர்போட்ட தம்பலம் இருத்தலுங் குற்றமாம். அதுபோல, ஞானத்தில் இன்பை நசிப்பித்து நான் அது ஆம் ஊனத்தை யார் ஒழிவிப்போர்– சுவானுபவத்தால் ஞானாநந்தத்தைப் அடைதற்கு ஏதுவாகக் கூறும் ஞான சாத்திரங்களைக் கேட்டறிந்தமாத்திரத்தில் யாம் அவ் ஆனந்தம் பெறாது, அதனை விடயச்சேற்றால் கெடுப்பித்து, இவ்விடயச் சேற்றில் அழுந்திநின்று அவ்வானந்தத்தின் மயமானேம் என்று கூறுங் குற்றத்தை யாவர் நீக்குகிற்பார்.
(வி-ரை.) மிடி பிணி தம்பலம் அவரிடத்திருத்தலால் தாம் சொன்னவாறு செய்பவர் அலர் என்று அறிந்தாற் போல, விடயப்பற்று விடாமையால் இவர் இங்ஙனங் கூறுதலே அன்றி அதனை அடைந்திலர் என்பதறிக.
மிடியாதி அவர்க்குக் கூறினமையால் விடயம் இவர்க்கு வருவிக்கப்பட்டது. இங்ஙனங் கூறுதல் மிகவும் தோஷமாகலின், ”ஊனத்தை யாரொழிவிப்போர்” என்றார்.
இத்திருவெண்பாவால் சிவாநந்தத்தைப் பெறாதிருந்தும் பெற்றேமென்று அசத்தியங் கூறல் மிகவும் பாவமென்று அறிவித்தவாறு காண்க.