ஒழுவிலொடுக்கம்

71. அண்ட முதலாயநந்தம் பிறப்பில் விதங்

அண்ட முதலாயநந்தம் பிறப்பில் விதங்
கொண்டுநர ராய்வினைகள் கூறொத்துத் – தொண்டிற்
சரிதாதி செய்து தவச்சார்பினிற்போர்க்
கரிதான பக்குவநா லாம்.

(இ-ள்.) அண்டம் முதல் ஆய் அநந்தம் பிறப்பின் விதம் கொண்டு நரர் ஆய்த் தொண்டில் சரியாதி செய்து வினைகள் கூறு ஒத்து- அண்டசம் சுவேதசம் உற்பீசம் சராயுசம் என்னும் இந்நான்கினில் தோற்றும் எழுவகைப் பிறவியில் உண்டாகிய எண்பத்து நான்கு நூறாயிரயோனி பேதங்களினும் அநந்தம் உருக்கொண்டு மாறிமாறிச் சுழன்று அவை தொலைத்துப் பின்பு நரவடிவு கொண்டு இவ்வடிவு அநந்தங் கோடியில் சிவபுண்ணிய நேரிட்டு அச்சிவ புண்ணியத்தால் சிவத்தொண்டு பூண்டு இச்சிவத்தொண்டினால் சரியை கிரியை யோகங்களைச் செய்து இச்சரியை கிரியை யோகங்களால் இருவினை ஒப்பு மலபரிபாகம் பிறந்து,

தவச்சார்பில் நிற்போர்க்கு அரிது ஆன பக்குவம் நாலாம் – உயிர்ச்சார்பு பொருட்சார்புகளை நீத்துத் தவச்சார்பில் நிற்போர்க்குக் கிடைத்தற்கு அரிதாகிய மந்தம் மந்ததரம் தீவிரம் தீவிரதரம் எனப் பக்குவம் நான்கு உள.

இத்திருவெண்பாவால் இருவினையொப்பு மலபரிபாகம் உடையோர்க்குப் பக்குவம் நால்வகையா யிருக்கும் என்று அறிவித்தவாறு காண்க.