அரைநோட்டஞ் சிந்தை பெருமூச் சறியாச்
சுரமூட்ட மெல்லாந் துறத்த – லுரைதோற்றா
மான மவுனம் விகள மறவைசா
வானவிவை பத்துமவத்தை.
(இ-ள் ) அரைநோட்டம் சிந்தை பெருமூச்சு அறியாச் சுரம் ஊட்டம் எல்லாம் துறத்தல் உரை தோற்றா மானம் – மனம் சக முகத்தைவிட்டு அகமுகமாய் நிற்றலின் அருகிய நோக்கமும், எப்போது ஞானாசாரியரை அறிந்து அடைவோம் என்னும் சிந்தனையும்,
அவரை நினைக்குந்தோறும் நெட்டுயிர்ப்பெறிதலும், இந்நினைவு மேலீட்டால் பிறரால் அறியக்கூடாத சுரம் மேலெழுதலும், இதனால் ஊண் உறக்க முதலிய எல்லாம் துறத்தலும், இதனைப் பிறருக்கு யாதென்று சொல்கோம் என்று சொல்லாது அடக்கும் மானமும்,
மவுனம் விகளம் மறவை சாவு ஆன இவை பத்தும் அவத்தை – இம்மானத்தால் ஒருவரோடு ஒன்றுஞ் சொல்லாதிருக்கும் மௌனமும், இங்ஙனம் கூறும் விசாரமேலீட் டால் பித்தமேறலும், இந்த அவத்தைகள் படுங்காலத்தும் அந்த ஞானாசாரியர் எதிர்ப்படாராயின் மூர்ச்சித்தலும், இறத்தலும் ஆகிய இவை பத்தும் பக்குவர்க்குத் தோற்றும் அவத்தைகளாம்.
(வி-ரை.) மறவை சாவு என்னும் இரண்டவத்தையும் தீவிரதர பக்குவர்க் கெனக் கொள்க.
இத்திருவெண்பாவால் ஞானாசாரியர் எதிர்ப்படாத போது அவர்க்கு இங்ஙனம் அவத்தைகள் தோற்றும் என்று அறிவித்தவாறு காண்க.