கல்லையுரு வாக்குங் கழற்றியிலே யில்வாழ்க்கைச்
சில்லநீர் போலத் தெளிந்துவருந் – தொல்லுலகங்
கான்ற சோ றாகுங் கதலித்தண் டைக்கனலி
லூன் றல்போன் ஞானமுதிக் கும்.
(இ-ள்.) கல்லை உரு ஆக்கும் கழற்றியிலே இல்வாழ்க்கை சில்லம் நீர் போலத் தெளிந்து வரும் – கல்லினை ஓர் பாவை வடிவாக்கும் முறைமைபோல், அருள் வடிவாக்குதற் பொருட்டு மந்த பக்குவர்க்கு உபதேச மொழிகளால் பாசத்தை நீக்குமிடத்துத் தேறிட்ட நீர் தெளிந்து வரு தல்போல், அவர்க்கு இல்வாழ்க்கை இஃது ஆர், யாம் ஆர் என்று தெளிவு பிறந்து வரும்;
தொல் உலகம் கான்ற சோறு ஆகும் கதலித்தண்டை கனலில் ஊன்றல்போல் ஞானம் உதிக்கும் – பழையதாக வரும் இப்பிரபஞ்சம் கக்கின சோறுபோல் அருவருப்பாகத் தோற்றும், வாழைத்தண்டை அக்கினியிற் சுடுதல் போல் அவர்க்கு ஞானந்தோன்றும்.
(வி-ரை.) பிரிந்த சேறும் தெளிந்த நீரும் கலந்து வருதல்போல் இல்வாழ்க்கையில் பற்றும் பற்றின்மையும் கலந்து வருதலின், “தெளிந்து வரும்” என்றார்.
வாழைத்தண்டைப் பன்னாள் பலகாட்டத்தால் சுடல் போல் இவர்க்குப் பன்னாளில் பற்பல உபதேச மொழிகளால் ஏறும் என்பதறிக.