ஒழுவிலொடுக்கம்

94. அறிவடங்கா வாயு வடங்கவசை வற்றுத்

அறிவடங்கா வாயு வடங்கவசை வற்றுத்
தறியிருந்தாற் போலச் சமாதி – பெறுகி
னடந்த குருட்டூம னஞ்சருந்திப் பாழூர்க்
கிடந்தகுழிப் புக்கதினுங் கேடு.

(இ-ள்.) அறிவு அடங்கா வாயு அடங்க அசைவு அற்றுத் தறி இருந்தாற்போலச் சமாதி பெறுகில்-  தமது அறிவால் அதன் இச்சைப்படி சென்று அடங்காத பிராணவாயுவைத் தமது இச்சைப்படி இரேசித்தும் பூரித்தும் கும்பித்தும் உள்ளடங்கச்செய்து தாமும் அதனோடு அசைவற்றுக் கம்பம் இருந்தது போல் சமாதி பெறுவர் ஆயின், (இச்சமாதி),

நடந்த குருட்டு ஊமன் நஞ்சு அருந்தி பாழ் ஊர் கிடந்த குழி புக்க அதினும் கேடு – நடக்கப்பட்ட பிறவி அந்தகனாகிய ஒரூமையன் விடத்தினைப் புசித்துக் குடிபோகிய ஊரின் கண் உள்ள பாழுங்கிணற்றில் எடுப்பாரற்று வீழ்ந்து கிடந்த அதனினும் கேடாம்.

(வி-ரை.) வாயு அடக்கல் முதலிய தொழில் செய்தலின், “நடந்த”என்றும், அதற்கு மேலாய ஞானமின்மையால், “குருடு’ என்றும், அந்த ஞானங் கூறும் சாத்திரம் அறியாமையால், “ஊமன்” என்றும், சடமாயுள்ள வாயுவுடன் கூடினமையால், “நஞ்சருந்தி” என்றும், முன் செய்த தொழில் மறந்தமையாலும் ஆண்டுத் திருவருள் விளக்காமையானும், “பாழூர்க் கிடந்த குழிப்புக்கு” என்றும், இங்ஙனம் உவமை கூறினார். இவற்றுள், “நடந்த குருடூமன்” என்பது அவர்க்கு உவமையும், “நஞ்சருந்திப் பாழூர்க்கிடந்த குழிப்புக்கு” என்பது அவர் சமாதிக்கு உவமையும் எனக்கொள்க. அவன் அறியாது வீழ்ந்தவன் இவர் அறிந்து வீழ்ந்தவர் ஆகலின், “அதினுங் கேடு” என்றார்.

இவ்விரண்டு திருவெண்பாவானும் கிரியாயோகஞ் செய்வது துன்பமென்றும், அங்ஙனம் துன்பப்பட்டுச் செய்யினும் ஆன்மலாபம் இன்றென்றும், தனது கருத்தை எடு த்து அறிவித்து அவ்யோகத்தை மறுத்தவாறு காண்க.