ஒழுவிலொடுக்கம்

96. தத்துவமுட்டாக்காய்ச் சமாதியினைச் சார்போதப்

தத்துவமுட்டாக்காய்ச் சமாதியினைச் சார்போதப்
பித்தனென்பார் பேரிற் பிழையுண்டோ – புத்திபோய்க்
கம்பக் களிறு கட்டக் கல்லினார் காணுமிவ
ரம்பரத்தை வந்துபிடிப் பார்.

(இ-ள்.) தத்துவம் முட்டாக்கு ஆய்ச் சமாதியினை சார் போதப் பித்தன் என்பார் பேரில் பிழை உண்டோ –தத்துவங்களை எல்லாம் நியதிபண்ணி நீங்கித் தம்மை அருளால் அறியும் அறிவின்றி, அத்தத்துவங்களைத் தன்மேல் முட்டாக்காய் மூடிக்கொண்டு, சமாதி கூடும் கிரியா யோகியைச் சார்போதனாகிய பித்தன் என்று கூறும் ஞானிகள் மேல் குற்றம் யாது?

புத்திபோய்க் கம்பக் களிறு கட்டக் கல்லில் நார் காணும் இவர் அம்பரத்தை வந்து பிடிப்பார் –யூகபுத்தி இன்றிக்கம்பத்தின் கண் அடங்கா மதகளிற்றைக் கட்டுதற்குக் கல்லின் கண் நார் உரிப்பாரும், தாம் இருத்தற்கு இடங்கொடுத்திருந்த ஆகாயத்தைச் சென்று பிடிப்பாரும் இவர்.

(வி-ரை.) “தத்துவ முட்டாக்காய்ச் சமாதி” என்றது மனத்தால் வாயுவை வாங்கி உள் நிறுத்தி அதனுள் தாம் மறைந்திருத்தலின், இங்ஙனம் இருப்போர்க்கு அறிவிக்க அறியும் போதமே இன்மையால், எங்ஙனம் சிவத்தை அறிவார் என்பது குறித்து, “கம்பக்களிறு கட்டக் கல்லினார்” என்றும், தம் உயிருள் பூரணமாயிருந்த சிவத்தை அறியாது மற்றோரிடத்து இருப்பதாய்க் கருதி அதனைப்பிடிக்கச்சேறலின், “அம்பரத்தை வந்துபிடிப்பார்” என்றுங் கூறினார்.

சார்போதம் சேர்ந்த கருவி மயமாயிருத்தல், மனமும் பிராணவாயுவும் இருந்த இடத்து எல்லாக் கருவிகளும் இருக்கும் ஆகலின், “தத்துவம்” என்று பொதுப்படக் கூறினார்.

இத்திருவெண்பாவால் சமாதி கூடுதல் இருவருக்கும் ஒத்ததாயினும், யோகி இங்ஙனம் செய்தலால் ஞானிகளால் இகழ்ந்து கூறப்பட்டான் என்று அறிவித்தவாறு காண்க.