ஒழுவிலொடுக்கம்

3. கூலித் தொழிலாளர் கொண்டு விற்போர் போன்ற குரு

கூலித் தொழிலாளர் கொண்டு விற்போர் போன்ற குரு
வேலைப் பகடிகளை மேவாதே – காலம்போற்
பார்த்திருக்க வைத்தபரமகுருவைப்பரவ
வார்த்தையிலை தீண்டா மனம்.

(இ-ள்.) கூலித் தொழிலாளர் கொண்டுவிற்போர் போன்ற குரு வேலைப் பகடிகளை மேவாதே – வேலை செய்து கூலிவாங்கிக்கொள்ளுங்      கூலித் தொழிலாளரையும், ஓர் பொருளைக்கொண்டு ஓர் பொருளை விற்கும் வணிகரையும் போன்று, பிறர்க்குக் கிரியைகளைச் செய்து காட்டியும், உபதேசங்களைக் கூறியும், அவர் கையில் அருத்தம் பறிக்கும் தமக்கியையாத குருவென்னும் பெயர்கொண்ட தொழில் செய்யும் பகடிக்கூத்தாடிகளை, மாணா! நீமெய்க் குருவென்று அடையாதே;

காலம்போல் பார்த்திருக்க வைத்த பரமகுருவைப் பரவ வார்த்தை இலை தீண்டா மனம் – கதிர் வலம் வருதலால் கணம், நாழிகை நாள், மாதம், இருது, வருடம், யுகம் முதலிய காலங்களும் அக்காலங்கள் தோறும் தோன்றும் பிரபஞ்சங்களும் அநந்தபேதமாய்த் திரியவும், தனக்கோர் திரிவின்றி அவற்றோடும் தாக்கற்றிருந்த காலதத்துவம்போல, மாயையில் தோற்றிய கருவிகளும் இக்கருவிகளால் காரியப்பட்ட பிரபஞ்சங்களும் அனந்த பேதமாய்த்திரியவும் தனக்கோர் திரிவின்றி இவற்றோடும் தாக்கற்றிருந்த அருளே வடிவாகக் கிருபாநோக்கம் வைத்து மாணாக்கனைச் சுட்டற்றிருக்க வைத்த மேலாகிய ஞானாசாரியனைத் தோத்திரம் பண்ண ஓர் வசனமும் இல்லை, தியானிக்க எனின் மனமும் அவனைத் தீண்டாது, ஆதலின் அக்குருவை அடைதி.

(வி-ரை.) கதிர் வலம் வருதலால், கண முதலிய கால பேதங்களும், பிரபஞ்ச பேதங்களும் நானாவாய்த் தோற்றினும், அவைகள் தோற்றற்கும் அது வலம் வருதற்கும் கால தத்துவம் எதுவானாற்போல, மாயையில் கருவிகளும் பிரபஞ்சங்களும் நானாவாய்த் தோற்றினும், இவை தொழிற் படுதற்கும், இவை மாயையில் தோற்றுதற்கும் திருவருள் ஏதுவாயிற்றென்பது காண்க.

பரமகுரு சூக்குமைவாக்கும் தற்போதமும் கடந்த சிவமென்றறிவிக்கவேண்டி “வார்த்தையிலை தீண்டா மனம்” என்றார்.

இத்திருவெண்பாவால் ஆசாரியனையும் அநாசாரியனையும் மாணாக்கனுக்கு அறிவித்தவாறு காண்க.