ஞானக் கிரியை நடிப்பவர்க்கு நாடோறும்
போனத் தளவே புசிப்பன்றி – யேனாந்
துறவா யவாவறுத்து மெய்யுணர்ந்த தூய
வறிவார்க் கறியாவின் பம்.
(இ-ள்.) ஞானக்கிரியை நடிப்பவர்க்கு நாள்தோறும் போனத்து அளவே புசிப்பு அன்றி – அகத்து ஞானம் இன்றிப் புறத்து ஞானாசாரமாய் நடிப்பவர்க்கு எக்காலமும் அன்னபானத்தளவு வரும் விடயானந்தாநுபவம் அன்றி ,
துறவு ஆய் அவாஅறுத்து மெய் உணர்ந்த தூய அறிவார்க்கு அறியா இன்பம் ஏன் ஆம்- துறவினை உடையராகித் துறந்த அப்பொருள்கள் மேல் முன்னர் வாசனையால் எழும் அவாவினை அறுத்து மெய்ப்பொருளை உணர்ந்த நிருமல ஞானிகட்கும் தோன்றாத சொரூபாநந்தானுபவம் ஏன் உண்டாம்?
(வி-ரை.) இவர் செய்யும் ஆசாரத்தைப் பிறர் கண்டு பெரியர் எனப் போனகங் கொடுத்தலின், “போனத் தளவே புசிப்பன்றி” என்றார்.
பேரின்பம் போதநாசத்தில் தோன்றாமல் தோன்றலான், “அறிவார்க் கறியா வின்பம்” என்றும், இவ்வின்பம் பெறுதற்கு ஏதுவாய ஞானம் இன்மையால், “ஏனாம்” என்றுங் கூறினார்.
துறவு – புறப்பற்று நீங்குதல். அவாவறுத்தல் – அகப்பற்று நீங்குதல். இவ்விருவகைப் பற்றும் நீங்கவே சகல கேவலங்களும் நீங்கும். இவை நீங்கவே மெய்யுணர்வு தோன்றும். ஆகலின், “துறவா யவாவறுத்து மெய் யுணர்ந்த தூயவறிவார்” என்றார்.
போனகம் என்பது போனம் என்றாயிற்று.
இத்திருவெண்பாவால் ஞானம் இன்றி ஞானாசார மாத்திரம் செய்வோர்க்குப் பிறப்பின்பமே அன்றி வீட்டின்பம் இன்றென்று அறிவித்தவாறு காண்க.
இந்த இன்பம் யாவரா வறியக்கூடுமென்று இரங்கிக் கேட்ட மாணாக்கனை நோக்கி மேற்கூறுகின்றார்.