ஒழுவிலொடுக்கம்

10. சாயா புருடனைப்போ லாநந்த மேதடித்த

சாயா புருடனைப்போ லாநந்த மேதடித்த
மாயா வயிரி மனமாண்ட – நேயவுரை
ஆவேசர் வீர ரரசர் மடலாளர்
சாவாநந் தர்க்குச் சரி.

(இ-ள்.) சாயா புருடனைப்போல் ஆநந்தமே தடித்த மாயா வயிரி மனம் மாண்ட நேய உரை- வடிவம் இன்றிய ஆகாயத்தில் வடிவம் போல் தடித்த சாயா புருடனைப்போல் வடிவம் இன்றிய பேராநந்தந்தானே காருணியத்தால் வடிவம் போற் காட்டி எழுந்தருளிவந்த மாயைக்கு ஓர் வயிரியான ஞானாசாரியரது மனாதீதமான கிருபா வசனம்,

ஆவேசர் வீரர் அரசர் மடலாளர் சாவாநந்தர்க்குச்சரி- ஆவேசம் ஏறினார் மாவீரராயினார் ஒருகுடைக்கீழ் ஆளும் அரசர் மடலெடுத்தவர் தாம் சாவது இன்பமாக்கருதினோர் ஆகிய இவர்களது மொழிகட்குச் சரியாம்.

(வி-ரை.) ஆவேசமேறினார் தற்செயல் இன்றிக் கூறுதல்போல முக்கரணங்களையும் தமதிடத்து அடக்கிக்கொண்டு அருளாய் நின்று கூறினமையானும், மாவீரராயினோர் எதிர்த்தாரைக் கொல்வதே கருத்தாகக் கூறுதல் போல் அறிவுக்கு எதிரீடாய்த் தோற்றுவன எல்லாம் அதனாற் கொல்வதே கருத்தாகக்கூறுதலானும், ஒருகுடைக்கீழ்ஆளும் அரசர் கூறிய மொழிப்படி இம்மைப் பயனாகுதல் போல் இவர் கூறிய மொழிப்படி மறுமைப்பயனாகுதலானும்,

மடலாளர் மற்றொன்றையுங் கூறாது தாம் நச்சியமாதினையே புகழ்ந்து கூறுதல் போலச் சரியா திகளைக்கூறாது தமது ஞானாநந்தத்தையே புகழ்ந்து கூறுதலானும், சாவாநந்தர் தாம் சாவதே இன்பமாகக் கூறுதல் போலத் தற்போத வொழிவையே இன்பமாகக் கூறுதலானும், ஆவேசமேறினார் முதலிய ஐவர் மொழியையும் உவமையாகக் கூறினார். அவரது மொழிக்கு உவமை கூறினமையால் இவரதுமொழி’ வருவிக்கப்பட்டது.

இவ்விரண்டு திருவெண்பாவானும் ஞானாசாரியாது திருவாக்குச் சிறப்புக் கூறியவாறு காண்க.