உனக்குமெய்யாய்த் தோன்றி யொழித்துவிடும்பாசம்
வினைச்சடமே யென்னில் விடம்போ – லுனைச்சுழற்று
மானாலுந் தன்னை யறியாத துன்னறிவு
தானாகு ஞானத் தடை.
(இ-ள்.) உனக்கு மெய்யாய்த் தோன்றி ஒழித்துவிடும் பாசம் வினைச்சடமே என்னில் விடம்போல் உனைச் சுழற்றும் ஆனாலும்- உனக்குத் தோன்றும்போது யான் எனது என்று கருதும்படி மெய்யாகத் தோன்றி நீங்கும் போது உன்னைப் புறம்பாய் ஒழித்து நீங்கிவிடும் தேகபோகங்களாகிய பாசம் வினைக்கீடாய் வரும் மாயாகாரியமாகிய சடமென்று அறிவிப்பினும், நீ இங்ஙனம் அறியாமையான், நின்னை விடம் புசித்தவனை மயக்குதல்போல் மயக்கும் எனினும், அப்பாசம் ஞானத்தடை அன்று, இனி ஞானத்தடை யாவது யாதெனின்,
தன்னை அறியாதது உன் அறிவு தான் ஆகும் ஞானத் தடை – தனுவாதிகளை யெல்லாம் இது இது என்று நானாவாய்ப் பகுத்தறிந்தும், அவற்றை அறிந்த தன்னை அறியாதது உனது புல்லறிவாகலின், இவ்வறிவே ஞானத்திற்குத் தடையாகும்.
(வி-ரை.) ஆணவத்தால் மறைபட்டிருந்த ஆன்மாவிற்குச் சிவன் மாயையில் தனுகரண புவன போகங்களைக் கொடுத்து இச்சா ஞானக் கிரியைகளை விளக்குவித்தலானும், இத்தனுவாதிகளால் சுருதிகுரு சுவானுபூதிகளை அறிந்து வீடடைதற்கு ஏதுவாகலானும், இவற்றைச் சடமென் றும் தனக்கு அந்நியமென்றும் அறிந்தபோது மயக்காமையானும், உனைச்சுழற்றும் ஆனாலும் இவை ஞானத்தடை அல்லவென்றும், தானென்றும் தனதென்றும் தன்னால் அறியப்பட்ட தேகபோகங்களைத் தானும் தனதும் அல்லவென்றும் அவற்றைத்தனக்கந்நியமாகக்கண்டு தன்னை உள்ளபடி அறியமாட்டாத தனது அறிவே ஞானத்தடை ஆகலின், “உன்னறிவு தானாகு ஞானத்தடை” என்றுங் கூறினார்.
தனுவாதி நான்கனுள் தனுவோடு காரணமும் போகத்தோடு புவனமும் ஒற்றுமையா யிருத்தலின், தேகபோக மென்று இரண்டாகக் கூறப்பட்டன.
இத்திருவெண்பாவால் தனுவாதிகளைத் தனக்கன்னியமாகக் காணின், திருவருள் தோற்றும் என்று அறிவித்தவாறு காண்க.
ஆன்மாவிற்கு இவை உருவம் அன்றாயின், இவற்றின் மயமாயிருப்பதென்னை யெனின், மேற்கூறுகின்றார்.