ஒழுவிலொடுக்கம்

162. உலகத்தை மாயா வுடலைப்பொய் யென்றா

உலகத்தை மாயா வுடலைப்பொய் யென்றா
லலகைத்தேர் போலறிவ தல்லால் – விலகித்
துடைத்தொழித்த லாகுமோ சொப்பனத்தீச் சூழ்ந்தாற்
கடக்கவிடுஞ் சாக்கிரம்போற் காண்.

(இ-ள்.) உலகத்தை மாயா உடலைப் பொய் என்றால் அலகைத்தேர்போல் அறிவது அல்லால் விலகித் துடைத்து ஒழித்தல் ஆகுமோ – மாயாகாரியமாகிய இப் பிரபஞ்சத்தினையும் உடம்பினையும் பொய் என்று அறிவித்தால், பேய்த்தேர்போல் பொய்யாகக் கண்டு அறிவது அன்றி அத்தேகாதி பிரபஞ்சங்களைப் பரிச்சேதமாய் நீக்கித் தள்ளி ஒழிக்கக்கூடுமோ? (நீர் இங்ஙனம் கூறியவற்றால் ஞான மும் கூடியிருக்குமோ எனின்),

சொப்பனத் தீச் சூழ்ந்தால் கடக்கவிடும் சாக்கிரம் போல் காண்-சொப்பனாவத்தையில் ஒருவனைக் கடக்கும் வழி இன்றி அக்கினி சூழ்ந்துகொண்டால் அவ்வக்கினியைக் கடக்க விடும் சாக்கிராவத்தை போல், உன்னைச் சூழ்ந்து கொண்டு நின்ற தேகாதி பிரபஞ்சங்களை ஞான சூரியன் வந்து தோன்றில் உனக்குப் பொய்யாகக் காட்டி விடும் என்றும் அறிதி.

(வி-ரை.) பேய்த்தேர் நீரைப் பொய் என்று கண்ட போது நீர் போல் தோற்றரவும் முன்னர் மெய் என்று கண்ட வாசனையும் இருக்கும்; சொப்பனத்தீயைக்கடக்க விட்ட சாக்கிரத்தில் இத்தோற்றரவு இன்றி முன் கண்ட வாசனை மாத்திரம் இருக்கும். அங்ஙனம் போல், சுத்தாவத்தையில் நிற்போர்க்கும் சுத்தத்தில் நிற்போர்க்கும் பிரபஞ்ச தோற்றும் ஆகலின், அவ்விரண்டு உவமையுங் கூறினார்.

இத்திருவெண்பாவால் கருவிகளது உண்மை அறிந்தவிடத்துத் தேகாதி பிரபஞ்சங்கள் முன்போல் மயக்குதுலின்றிக் காட்சிவாதனை மாத்திரையாய் நிற்கும் என்று அறிவித்தவாறு காண்க.

கருவிகள் முப்பத்தாறையும் பொய்யாகக் கண்டு நீங்கினால் அந்த ஞானம் தோன்றுமோ எனின், மேற்கூறு கின்றார்.