ஒழுவிலொடுக்கம்

174. தனுவாதி நான் கினுக்குஞ் சார்வழிந்து சற்று

தனுவாதி நான் கினுக்குஞ் சார்வழிந்து சற்று
நினையா திளைப்பாறி நின்றான் – மனையாமோ
காந்தக் கடத்தூசி காற்றற்ற தீபமென
வாந்தத் துவங்களய லாம்.

(இ-ள்.) தனு ஆதி நான்கினுக்கும் சார்வு அழிந்து சற்றும் நினையாது இளைப்பு ஆறி நின்றால் மனை ஆமோ- போகமும் நானன்று புவனமும் நானன்று தநுவும் நானன்று கரணமும் நானன்று என்று உள்ளபடி அறிந்து, நியதிகளைந்து, அத்தநுவாதி நான்கினிடத்தும் யான் எனதென்று சார்ந்து நின்ற போதச்சார்வு கெட்டு, அவற்றை மீட்டுச் சற்றும் பற்றாது அருளில் இளைப்பாறி அசைவற நின்றால், மனையாகிய புவனத்திடத்தும், அம்மனையைப் பற்றியிருந்த வனிதாதி போகத்திடத்தும், முன் போல் பற்றுண்டாமோ? (ஆயின், புவன போகங்களில் பற்றின்றி நிற்பினும் தநுகரணங்களிற் பற்றின்றி நிற்பது எங்ஙனம் எனின்),

காந்தக் கடத்து ஊசி காற்று அற்ற தீபம் என ஆம் தத்துவங்கள் அயல் ஆம் – காந்தக் கடத்திற்கு எதிர்முகமாயபோது பற்றியும், அதனுட்கிடந்தபோது பற்றாதும் இருந்த காந்தக் கடத்து ஊசிபோலும், காற்றில் இருந்த போது அசைந்தும் காற்றின்றிய போது அசையாதும் இருந்த காற்றற்ற தீபம் போலும், (அத்தநுகரணங்களைத் தனக்கந்நியமாய்க் கண்டு நீங்கி நிற்பின், அவற்றோடும்) தாக்கற்று நிற்பது உண்டாம். (அவற்றோடும் தாக்கற்று நிற்கவே மற்றைய) தத்துவங்களும் அயலாய் நீங்கும்.

(வி-ரை.) தநுவாதிகளில் கறங்குபோல் சுழன்ற தன்மை திருவருட்கண் நின்றபோது இன்மையால் “இளைப்பாறி” என்றார்.

காந்தக் கடத்திற்கு எதிர்முகமாயபோது பற்றிய ஊசி அதனுட்கிடந்தபோது பற்றாது இருந்தது போல், சகமுகமாய் நின்று தேகத்தை யானென்று பற்றிய போதம், அகமுகமாய் நின்று திருவருளை அடைந்தபோது அத்தேகத்தை யானென்று பற்றாது ஆகலின், “காந்தக்கடத்தூசி” என்றும்,

அப்புவன போக தநுகரணங்களைப் போதம் பற்றாது நின்ற போது கரணம் தற்சேட்டையற்று அடங்கும், அப்போது போதந் திருவருளோடுங் கூடிக் காற்றற்ற தீபம்போலாகி மீட்டும் கரணத்தோடுங் கூடாது ஆகலின், “காற்றற்ற தீபம்” என்றும், கரணங்களறவே அக்கரணங்களினது சேட்டைக்கு ஏதுவாய கலாதிகளும், அக்கலாதிகளைப் பிரோகம் பண்ணும் சுத்த தத்துவங்களும் நீங்கும், ஆகலின் “தத்துவங்களயலாம்” என்றுங் கூறினார்.

இத்திருவெண்பாவால் புவன போகங்களைத் தான் அன்றென்று உள்ளபடி அறிந்து களைந்து, அவற்றின்கட்சார்ந்து நின்ற போதச்சார்வுகெட்டு, அருட்சார்பினின்றால் புவன போகப் பற்றறும் என்பதும், தநுகரணங்களைத் தனக்கு அந்நியமென்று அறிந்து, அவற்றொடும் தாக்கற்றுத் தனக்கு அநந்நியமான அருளாய் நிற்பின் அத்தநு கரணப்பற்றறும் என்பதும், இங்ஙனம் அறவே மற்றைத் தத்துவங்கள் தாமே அறுமென்பதும் அறிவித்தவாறு காண்க.

உத்தமராயினோர் கற்புடைய மனைவியைத் துறப்பரோ என்ற மாணாக்கனை நோக்கி, மேற் கூறுகின்றார்.