ஒழுவிலொடுக்கம்

176. இடும்பைக்கே கொள்கலமா யேழ்நரகுக் கீடாங்

இடும்பைக்கே கொள்கலமா யேழ்நரகுக் கீடாங்
குடும்பத்தைக் குற்ற மறைக்கி – னடுங்காரோ
வைவர்க் கொருவ னறுதொழிலைச் செய்தலால்
மெய்யைப் பொய் யாக்கி விடும்.

(இ-ள்.) இடும்பைக்கே கொள்கலம் ஆய் ஏழ் நரகுக்கு ஈடு ஆம் குடும்பத்தைக் குற்றம் மறைக்கின் நடுங்காரோ- அஞ்ஞானிகள் இம்மைக்கண்ணே துன்பங்களை எல்லாம் தாம் அநுபவித்தற்கு ஏற்றுக்கொள்வதாய கப்பலாய், மறுமைக்கண்ணே எழுவகைப் பிறவியாகிய எழுவகை நரகத்தையும் உண்டாக்கும் கனதையினையுடைய மனை சுதர் முதலிய குடும்பத்தை இங்ஙனம் இகபரங்களினும் துக்கத்தைத் தருவதென்று அறியார்; இங்ஙனம் அறியவொட்டாது ஆணவமாகிய குற்றம் அவரை மறைத்தலால், இவ் வாணவக் குற்றம் நீங்கினோர் குடும்பக் குழாத்தைக் கண்டாலும் உளம் வெறுவி நடுக்கம் உறார் கொலோ? (ஆயின், நீர் மெய்யென்று கூறிய சிவம் ஒருவர்க்கும் தோன்றா திருப்பானேன் என்னின்),

ஐவர்க்கு ஒருவன் அறுதொழிலைச் செய்தலால் மெய்யைப் பொய்யாக்கிவிடும் – ஐந்து இந்திரியங்கட்கும் ஓர் முதல்வனாகிய ஆன்மா அவ்விந்திரியங்களால் அறிந்து அநுபவிக்கும் விடய சுகத்தின் பொருட்டு உழவு முதலிய அறுவகைத் தொழிலில் முயற்சிப்படலால் இம் முயற்சி அச்சிவத்தைத் தெரியவொட்டாது பொய்யாக்கிவிடும், (இதனை நீ அறிதி),

(வி-ரை.) குடும்பத்தால் இம்மைக்கண் தேகதுக்கம் மனோதுக்கங்கள் இடையறாது வருதலின், “இடும்பைக்கே கொள்கலமாய்” என்றும், இக்குடும்ப வாசனையால் மறுமைக்கண் பிறவிகள் தொன்றுதொட்டு வருமாகலின், “ஏழ் நரகுக்கீடாம்” என்றுங் கூறினார்.

“அறுதொழிலைச் செய்தலால் மெய்யைப் பொய் யாக்கிவிடும்” எனவே குடும்பத்தின் பொருட்டுச் செய்யும் அறுவகைத் தொழில்களின் முயற்சியைவிட்டுச் சிவயோக முயற்சியில் தொடங்கின் மெய்ப்பொருள் தோற்றுமென்பதாயிற்று. அறுவகைத் தொழில்களாவன -உழவு, தொழில், வாணிகம், எழுத்து, சிற்பம், பரதம் இவை ஆறுமெனக் கொள்க.

உத்தம பக்குவராயினோர் குடும்பத்தோடும் கூடியிரார் என்று இன்னுங் கூறுகின்றார்.