ஒழுவிலொடுக்கம்

178. கன்னனைப்போற் றன்னை யறிவனோ காக்கையுடன்

கன்னனைப்போற் றன்னை யறிவனோ காக்கையுடன்
மன்னு குயில் போன வாறுபோ – லன்னி யமாய்ப்
பேசாது போன துறவி பிறப்பறுப்பார்க்
காசானு மென்றேயறி.

(இ-ள்.) கன்னனைப்போல் தன்னை அறிவனோ காக்கையுடன் மன்னு குயில் போன ஆறு போல் அன்னியம் ஆய்ப் பேசாது போன துறவி- யான் இன்ன சாதி இன்னார் குலம் தாய் தந்தை இன்னாரென்று தனது குல குடும்பங்களை அறியாத கன்னனைப்போலும், உத்தமபக்குவன் யான் இன்ன சாதி இன்னார் குலம் இன்னார் தாய் தந்தை யென்று தனது குல குடும்பங்களைப் பகுத்தறிவனோ, இங்ஙனம் ஒன்றையும் பகுத்தறியாது காக்கையுடன் பருவம் வருமளவும் தனது இனம்போல் கூடிச் சென்று, பருவம் வந்த காலை அதற்கு அந்நியமாய்ப் பேசாது சென்ற நிலை பெற்ற குயில்போலும், அநித்திய விவேகம் வருமளவும் அவரினம்போல் கூடியிருந்து, அந்த விவேகம் வந்த காலை அவர்க்கு அன்னியமாய்ப் பிரிந்து அவரோடுஞ் சொல்லாது சென்ற துறவியே மெய்த்துறவி;

 பிறப்பு அறுப்பார்க்கு ஆசானும் என்றே அறி –அத்துறவி பிறப்பறுக்கும் பொருட்டுத் துறந்தார்க்கு ஆசாரியனும் ஆவன் .

(வி-ரை.) தருமன் முதலிய துணைவரையுங் குந்தியாகிய தாயையுங் கண்டிருந்துங் கன்னன் அறியாதது போல், இவன் குடும்பத்தாரைக் கண்டிருந்தும் அநித்திய விவேகத்தால் பொய்யாய்க் கண்டான் ஆதலின், “கன்னனைப்போற் றன்னை யறிவனோ” என்றும், குயில் காக்கையோடு கூடியிருந்தபோதும் தன் குரலைக் காட்டினால் கொத்துமென்று அடங்கியிருந்து, செல்லும்போதுங் கூவாது சென்றது போல், குடும்பத்தோடு கூடியிருந்த போதும் தான் துறந்து சேறலை அவரோடும் சொன்னால் பற்றுவரென்பது அறிந்து, சொல்லாதடங்கியிருந்து, செல்லும்போதும் சொல்லாது சென்றமையால் “குயில்போனவாறு போற் பேசாது போன துறவி ” என்றுங் கூறினார்.

அறிவும் துறவும் உள்ள ஞானி சிறப்புளன் ஆகலின், இவனை “ஆசானும் ” என்றார்.

ஏ – அசை .

இத்திருவெண்பாவால் குல முதலியவற்றின் அபிமானம் இன்றி, அநித்திய விவேகம் வருமளவும் அவற்றோடு உண்ணோக்குதல் அற்றுக் கூடிநின்று, அந்த விவேகம் வரின் ஒருவரோடும் விடைபெறாது சென்றவனே துறவிகளுட் சிறந்தவன் என்று அறிவித்தவாறு காண்க.

இங்ஙனம் துறந்து செல்வாரை மாதா பிதாக்கள் வந்து தடுத்தால் எங்ஙனம் செல்வார் எனின், மேற் கூறுகின்றார்.