ஒழுவிலொடுக்கம்

181. உடுக்கை மறந்தவருக் கூர் காடென் றுண்டோ

உடுக்கை மறந்தவருக் கூர் காடென் றுண்டோ
வடுத்தயலா ருண்டோபே யானாற் – சுடப்போட்
டெதிரிட்ட தெல்லா மிழந்தார்க் கிருந்த
பதியைக்கொண் டுண்டோ பயன்.

(இ-ள்.) உடுக்கை மறந்தவருக்கு ஊர் காடு என்று உண்டோ அடுத்தயலார் உண்டோ பேய் ஆனால் – குடும்பக்கூட்டங்களை எல்லாம் துரிசறத் துறந்து தேகத்தையுஞ் சத்துருவாகக் கண்டு அத்தேகத்தில் நான்கு முழஞ் சுற்றும் உடுக்கையும் மறந்து திரிவோர்க்கு இது ஊர் என்றும், இது காடென்றும் பகுத்துக் காணும் நினைப்பும் உண்டுகொலோ? அஃதன்றி பூரணப் பேய்வயமாகையினால் அவர்க்கு அடுத்தாரும் அயலாரும் உண்டுகொலோ இங்ஙனம் உடுக்கை மறந்து அடுத்தார் அயலாரென்பதும் தோன்றாதிருப்பதும் அன்றி,

சுடப் போட்ட எதிரிட்டது எல்லாம் இழந்தார்க்கு இருந்த பதியைக் கொண்டு உண்டோ பயன் – கரத்தில் எடுத்த பொருள் மிகவுஞ்சுட விரைந்து போட்டு நின்றால் போல், தமதறிவிற்கு எதிரிட்ட கருவிகளை எல்லாம் துன்பமாகக் கண்டு ஞானாக்கினியினால் எரித்து இவற்றையும் இழந்தார்க்குத் தாம் முன்னிருந்த பதியில் இப்போது இருந்தது கொண்டு பயன் என்னை உண்டுகொல்?

இத்திருவெண்பாவால் தேகாபிமானம் விடுத்து அதனைப் பகையாகவும், எதிரிட்டவைகளைத் துன்பமாகவும் கண்டு, அனைத்தையும் இழந்து பூரண மருள் கொண்டோர் இது நாடு இது காடென்றும் இவர் அடுத்தார் இவர் அயலாரென்றும் பகுத்தறிதல் இன்றாகலின், முன்னிருந்த பதியில் இப்போது இருப்பதனால் அவர்க்கு வரும் பயன் ஒன்றும் இன்றென்று அறிவித்தவாறு காண்க. உடுக்கை- வஸ்திரம்.

முன்னிருந்த பதியைவிட்டு, மற்றோர் சிவதலத்தில் ஓரிடம் பற்றியிருந்து, ஒருவர் முன்னிலையாய் உதராக்கினிக்கு அன்னமாத்திரம் வாங்கியுண்டு தவத்தைப் பண்ண லாகாதோ எனின், மேற்கூறுகின்றார்.